Published : 18 Feb 2020 10:55 AM
Last Updated : 18 Feb 2020 10:55 AM
இந்தக் காலங்களில் போராட்டங்களின் போது யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை, மாறாக மகாத்மா காந்தி போராட்டங்களின் போது நிலைமை தவறாகச் செல்லாமல் பொறுப்பேற்றுக் கொண்டு தடுத்திருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன் பாகவத் திங்களன்று புத்தக அறிமுக விழாவில் பேசும் போது தெரிவித்தார்.
“காந்திஜியை புரிந்து கொள்ள சரியான சமயம்” (Gandhiji Ko Samajhney Ka Sahi Samay) என்ற நூலை என்.சி.இ.ஆர்.டி தலைவர் ராஜ்புத் எழுதியுள்ளார். புதுடெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மோஹன் பாகவத் கூறியதாவது:
மகாத்மா காந்தி போராட்டங்களின் போது தவறாக ஏதாவது நடந்தால் அவர் தானே அதனைச் சரி செய்வார். இப்போதெல்லாம் போராட்டங்கள் தவறாகச் சென்றால், சட்டம் ஒழுங்கு சூழல் உருவானால் மக்கள் தடியடியையும் தோட்டாக்களையும் எதிர்கொள்கின்றனர். மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அதன் பின்னால் உள்ளவர்கள் போராட்டம் வெற்றியா தோல்வியா என்றுதான் பார்க்கிறார்கள்.
மகாத்மா காந்தி தன் வாழ்க்கையில் ஒருபோதும் தான் இந்து என்று கூறிக்கொள்வதிலிருந்து விலகியதில்லை, சில வேளைகளில் தான் ஒரு சனாதன இந்து என்றே அவர் கூறிக் கொண்டார். கடவுளை பலவழிகளில் கும்பிடுவது பற்றி அவர் வேறுபாடுகள் கற்பிக்கவில்லை. எனவே அவர் தனது நம்பிக்கையைப் பற்றியதோடு பிறர் நம்பிக்கைகளையும் மதித்தார்.
காந்தியின் இந்தியாவை அடையும் கனவு இப்போதைய இளைஞர்களிடம் உள்ளது. வளர்ச்சியும் அதன் கருத்தாக்கமும் மனிதார்த்த அடிப்படையில் கணக்கிடப்பட்டு வரிசையில் கடைசியில் இருக்கும் மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். காந்திஜி இந்தியாவை இந்தியப் பார்வையிலிருந்தே பார்த்தார்.
மகாத்மா காந்தியின் இந்தியா பற்றிய பார்வைக்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பார்வைக்கும் ஒற்றுமைகள் உள்ளன, என்றார் மோஹன் பாகவத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT