Last Updated : 18 Feb, 2020 08:22 AM

7  

Published : 18 Feb 2020 08:22 AM
Last Updated : 18 Feb 2020 08:22 AM

செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி

புதுடெல்லி

செம்மொழி பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியாவைவிட, சுமார் 22 மடங்கு கூடுதலாக சம்ஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் சம்ஸ்கிருதத்தை அடுத்து, கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்மொழியும் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றன. இவற்றில் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் ஆய்வுக்கு மட்டுமே மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. மற்ற 4-ல் மலையாளம் மற்றும் ஒடியாவுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. அத்துடன் அம்மொழிகளுக்காக மத்திய அரசின் ஆய்வு மையங்கள் கூட இன்னும் தனியாக தொடங்கப்படவில்லை. மாறாக மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திலேயே அவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு அதன் துறைகள் உயர் ஆய்வு மையங்களாக மாற்றப்பட்டன. பிறகு தெலுங்கு உயர் ஆய்வு மையம் மட்டும் ஆந்திராவின் நெல்லூருக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் சமீபத்திய கூட்டத்தொடரின்போது, சம்ஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி தொகை ஒதுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன்படி, 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழாய்வு நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக தமிழக முதல்வர் இருந்தும் அதனால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதன் பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்களும், தமிழறிஞர்களாக இல்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் கட்டுமான வளர்ச்சி தடைபட்டு வருகின்றன.

சர்வதேச நாடுகளுடன் தமிழுக்கான ஒருங்கிணைப்பு கிடைக்காததுடன் ஆய்வுகளும் முறையாக நடைபெறாமல் உள்ளன. தொடக்கத்தில் மூத்த ஆய்வறிஞர்கள் 10 பேர் இருந்தனர். தற்போது ஒருவர்கூட இல்லை. புதிதாக அமர்த்தப்பட வேண்டிய சுமார் 150 பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதுபோன்ற செயல்களால் 13 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இழப்பையும் மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x