Published : 17 Feb 2020 05:07 PM
Last Updated : 17 Feb 2020 05:07 PM

போராடும் உரிமை அடிப்படை உரிமையே ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஷாஹின்பாக் போராட்டக்காரர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

படம்: ஷிவ்குமார் புஷ்பகர்.

புதுடெல்லி

குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக டெல்லி, ஷாஹின்பாக்கில் நடைபெறும் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, போராடும் உரிமை அனைவருக்குமான அடிப்படை உரிமையே ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, “பலதரப்பட்ட பார்வைகள், கருத்துகளில்தான் ஜயநாயகம் இயங்குகிறது. இதில் எங்களுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை. போராட விரும்புகிறீர்கள், பிரச்சினையில்லை. சிஏஏ குறித்த எங்கள் தீர்ப்புக்குக் காத்திருக்க நீங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு எதிராக சமூக ரீதியாக ஒன்று திரண்டுள்ளீர்கள்.. எங்களுக்குப் பிரச்சினை இல்லை. 1000 இடங்களில் நீங்கள் போராட்டம் நடத்தினாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை, ஆனால் சாலை மறியலில் ஈடுபடுவது, பொதுப்பகுதிக்குள் நுழைவது போன்றவை இல்லாமல் நீங்கள் போராட வேண்டும் என்பது குறித்தே எங்கள் கவலை. அனைத்து உரிமையுடன் பொறுப்பும் இணைவது நலம்” என்றார்.

“போராடுவதற்கான உரிமை உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். ஒன்று கூடுவதற்கான அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் இந்த உரிமை, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குள் வருவதே” என்று அமர்வின் இன்னொரு நீதிபதி ஜோசப், டெல்லி போலீஸார் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார்.

துஷார் மேத்தா, தன் வாதத்தில், “குழந்தைகள், பெண்கள் போராட்டத்தில் பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனர்” என்று கூறியதற்குத்தான் மேற்கண்ட பதிலை நீதிபதி ஜோசப் அவருக்கு அளித்தார்.

சாமானிய மக்களின் போராடுவதற்கான உரிமையை கண்டிப்பதோ, குறைப்பதோ நீதிமன்றத்தின் பணியல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம், “ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் ஷாஹின்பாக் போராட்டம் போல் வேறு சில இடங்களிலும் நடந்தால் என்ன ஆகும் என்பதே எங்கள் கவலை” என்று கூறியது.

“உங்களுக்கு (ஷாஹின்பாக் போராட்டக்காரர்களுக்கு) உண்மையான கவலைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் இப்படிப் போராட்டத்தின் மூலம் சாலைகளை மறிப்பது, பொது இடங்களுக்குள் நுழைவது என்று ஆரம்பித்தால் எங்கு போய் முடியும்? இது குழப்பத்தையே விளைவிக்கும்” என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை உரையாடலாளர்களாக நியமித்து ஷாஹின்பாக் போராட்டக்காரர்கள் வேறு இடத்துக்கு நகர்ந்து போராட்டத்தைத் தொடரவும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போராட்டத்தைத் தொடரவும் அறிவுறுத்துமாறு பணித்துள்ளது. முன்னாள் அரசு அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லாவை அழைத்து போராட்டக்காரர்களிடம் பேசுவது குறித்து வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் விட்டது.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், மற்றும் ஹபிபுல்லா ஆகியோர் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில் ஷாஹின்பாக் வழியாகச் செல்லும் மாற்று வழிகளை வேண்டுமென்றே அடைத்து வைத்து டெல்லி, நொய்டா, பரிதாபாத் ஆகிய இடங்களிலிருந்து வரும், ஆகிய இடஙக்ளுக்குச் செல்லும் வழிகளை வேண்டுமென்றே அடைத்து வைத்து போராட்டக்காரர்களுக்கு நெருக்கடி அளிக்கின்றனர் என்று புகார் எழுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்றம் துஷார் மேத்தாவிடம் போராட்டக்காரர்களுக்கு வேறு இடத்தை பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளது. ஆனால் துஷார் மேத்தா, போராட்டக்காரர்கள்தான் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

அப்போது, நீதிபதி ஜோசப், “ஆனால் போராடும் உரிமை ஜனநாயகத்தில் அடிப்படை உரிமையாகும்” என்றார்.

போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உரையாடலாளர்களை நியமித்ததன் மூலம் போராட்டக்காரர்கள், 'எந்த ஒரு அமைப்பும் நம் முன் மண்டியிட வேண்டும்’ என்று நினைக்க வழிவிட்டு விடக்கூடாது என்றார்.

இப்போதும் குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், “இப்போது இந்த விவகாரத்தை முடித்து வைக்க நாங்களே விஷயத்தை எடுத்துக் கொண்டுள்ளோம். அவர்கள் போராட்டம் ஆரம்பித்து 68 நாட்கள் ஏன் அவர்களை நீங்கள் சந்திக்கவில்லை?" என்றார்.

ஆனால் இதற்கு சொலிசிட்டர் ஜெனரல், மதத்தலைவர்கள், உள்ளூர்வாசிகள் மூலம் முயற்சி எடுத்தோம் ஆனால் பயனில்லை என்றார்.

“நாங்கள் எங்கள் கருத்தைக் கூறிவிட்டோம்.. எதுவும் பயனளிக்கவில்லை எனில் நாங்கள் அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறோம்" என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் பிப்.24ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x