Published : 17 Feb 2020 04:09 PM
Last Updated : 17 Feb 2020 04:09 PM
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி (ஜேவிஎம்(பி) கட்சித் தலைவருமான பாபுலால் மாரண்டி, இன்று பாஜகவில் இணைந்தார்.
ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாபுலால் மாரண்டி இணைந்தார்.
பாஜகவில் கடந்த 1990களில் இருந்து தீவிரமான விஸ்வாசியாக இருந்துவந்த பாபுலால் மாரண்டி பாஜவில் 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
பிஹாரில் இருந்து ஜார்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபின், அங்கு நடந்த தேர்தலில் முதலாவது முதலமைச்சராக பாபுலால் மாரண்டி பொறுப்பேற்றார். 2000 முதல் 2003-ம் ஆண்டுவரை முதல்வராக பாபுலால் மாரண்டி இருந்தார்.
அதன்பின் பாஜக தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியில் இருந்து பிரிந்து, 2006-ம் ஆண்டு ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எனும் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். ஆனால், அதன்பின் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் கணிசமான அளவுக்கு 5 எம்எல்ஏக்கள் வரை பெற்றாலும் மக்களவைத் தேர்தலில் ஒரு இடம் கூடப் பெறவில்லை.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாபுலால் மாரண்டி கட்சி 2 முதல் 3 இடங்களையே பெற்றது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து, தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க பாபுலால் மாரண்டி முடிவு செய்தார். இதற்காக ராஞ்சி நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பாபுலால் மாரண்டி பாஜகவில் இணைந்தார்
அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், " பாபுலால் மாரண்டி மீண்டும் பாஜகவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு உரிய மரியாதையும், பொறுப்புகளும் பாஜகவில் வழங்கப்படும். அவரை மீண்டும் பாஜகவுக்குள் கொண்டுவரக் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து விரும்பினேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு 370 பிரிவை ரத்து செய்வது ஆகியவற்றுக்கு மாரண்டி ஆதரவு அளித்தார்" எனத் தெரிவித்தார்
பாபுலால் மாரண்டியுடன் அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் பாஜகவின் கூட்டத்துக்கு வந்திருந்து கட்சியில் இணைந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT