Last Updated : 17 Feb, 2020 11:10 AM

3  

Published : 17 Feb 2020 11:10 AM
Last Updated : 17 Feb 2020 11:10 AM

சிஏஏவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: தெலங்கானா அரசு முடிவு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் : கோப்புப் படம்.

ஹைதராபாத்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இதுவரை கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அந்த வரிசையில் தெலங்கானா அரசும் இணைகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள யாருக்கும் குடியுரிமை பறிபோகாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று தெலங்கானா அமைச்சரவை கூடி சிஏஏ தொடர்பாக விவாதித்தது. இந்தக் கூட்டம் நள்ளிரவு வரை நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.



இந்தக் கூட்டத்தின் முடிவில் தெலங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில், " குடியுரிமை வழங்கும் விஷயத்தில் எந்தவிதமான பாகுபாடும் மதத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தெலங்கானா அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படும்.

சட்டத்தின் முன் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். அரசியலமைப்பு வலியுறுத்தியுள்ள மதச் சார்பின்மைக்கு மாறாக மதத்தை முன்நிறுத்தி குடியுரிமை வழங்கப்படுவது கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும். சட்டப்பேரவையிலும் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x