Published : 15 Feb 2020 08:24 AM
Last Updated : 15 Feb 2020 08:24 AM
ஆர்.ஷபிமுன்னா
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் தேசிய கட்சியாகக் களம் இறங்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் நாளை முதல்வராகப் பதவி ஏற்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் தனக்கு எந்த இலாகாவையும் ஒதுக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
டெல்லி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தேசிய அரசியலில் களம் இறங்க அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இக்கட்சி கடந்த முறை பஞ்சாப் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 தொகுதிகளில் அக்கட்சிக்கு 20 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.
மேலும்18 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடம் பெற்று பாஜக - அகாலி தளம் கூட்டணியை பின்னுக்கு தள்ளி இருந்தது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவிகிதம் 24 ஆக இருந்தது.
எனினும், கோவாவில் 6.3 சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றாலும் அங்கு ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இதேபோல், ஹரியாணாவின் சட்டப்பேரவை தேர்தலில் அதற்கு ஒரு தொகுதி கூடக் கிடைக்கவில்லை.
தலைமைத் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஓர் அரசியல் கட்சி தேசிய கட்சியின் அந்தஸ்தைப் பெறுவதற்கு அந்தக் கட்சிக்கு 4 மாநிலங்களில் குறைந்தது 6 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். எனவே, அடுத்து வேறு சில மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. இந்த ஆண்டு, பிஹாரிலும் அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், அசாம், கேரளா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றில் எதிர்க்கட்சிகளாக பிஹாரில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் சற்று வலுவிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
முதல்வர் நிதிஷ்குமாரின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணிக்கும் எதிர்ப்புகள் வளர்ந் துள்ளன. இதனால், பிஹாரில் மாற்றுக் கட்சியாக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆம் ஆத்மி நம்புகிறது. தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் டெல்லி தேர்தலில் கேஜ்ரிவாலுக்கு ஆலோசனை அளித்திருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தேசிய அரசியலில் ஆம் ஆத்மி இறங்குவதற்கு முன்னோட்டமாக தேசிய அளவில் கட்சியைக் கட்டமைக்க என கடந்தவாரம் நாங்கள் அறிவித்த மொபைல் எண்ணில் மிஸ்டு கால் அளித்து 11 லட்சம் பேர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
டெல்லி தேர்தலில் ஆலோசனை அளித்த பிரஷாந்த் கிஷோர், பிஹாரிலும் அதை அளிக்க சம்மதித்துள்ளார். பாஜக, காங்கிரஸுக்கு நேரடிப் போட்டி நிலவும் மாநிலங்களில் எங்கள் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றை குறி வைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.
இதுபோல், தேசிய அரசியலுக்கு ஆம் ஆத்மி குறிவைப்பது முதன்முறை அல்ல. 2013 டெல்லி தேர்தலுக்கு பின் மக்களவை தேர்தலிலும் பெரும்பாலான மாநிலங்களில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து கேஜ்ரிவாலும், அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மியின் நிறுவனர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸும் போட்டியிட்டனர். இவற்றில் பஞ்சாபில் மட்டும் 3 எம்.பி.க்களை அக்கட்சி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT