Published : 14 Feb 2020 02:40 PM
Last Updated : 14 Feb 2020 02:40 PM
குஜராத்திற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரைப் புதுப்பிக்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.
குடிசைகளை அகற்றி சுவர் எழுப்பப்படுவது குறித்த புகார்களுக்குப் பதிலளித்த அகமதாபாத் நகராட்சி ஆணையர் ''சுவர் எழுப்பப்படுவது ட்ரம்ப்புக்காக அல்ல'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் வருகை தர உள்ளனர்.
அமெரிக்க அதிபர் அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூடுதலாக 10 ஆயிரம் இருக்கைகள் இடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் வருகையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, "நமது மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை வழங்கும். இந்த விஜயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் பலப்படுத்த இது நீண்ட தூரம் செல்லும்'' என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்தியப் பயணம் குறித்து நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அகமதாபாத் நகரில் அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நகரில் வசிக்கும் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
சாலைகளை மீண்டும் உருவாக்குவது முதல் சேரிகளை மறைக்க ஒரு சுவரைக் கட்டுவது வரை அனைத்து அழகுபடுத்தும் பணிகளிலும் இறங்கியுள்ளது.
குடிசைகள் அகற்றி சுவர்கள் எழுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்துக் கேட்டபோது அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறியதாவது:
''சாலையில் அத்துமீறலைத் தடுக்க ஒரு சுவரைக் கட்டும் முடிவு இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் வருகைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விஐபி வருகையுடன் சுவர் எழுப்பப்படும் பணியை இணைத்துப் பார்ப்பது சரியானதல்ல. நான் இப்பகுதிக்குச் சென்று, குடிசைவாசிகளுடன் பேசினேன். அவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு சுவரைக் கட்ட முடிவு செய்தோம்.
மற்றபடி அமெரிக்க அதிபரின் வருகைக்காக நகரை அழகுப்படுத்தும் பணிகள் செய்து வருவது அவசியமான ஒன்று. அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் வரை அதாவது அனைவரும் அறியக்கூடிய கெம் சோ ட்ரம்ப் (ஹௌடி ட்ரம்ப்) நிகழ்வு நடைபெறும். மோடேரா ஸ்டேடியம் வரை வழியெங்கும் தெரு நாய்களும் கால்நடைகளும் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும். ஆனால், அமெரிக்க அதிபர் வரும்போது சாலை தூய்மையடைந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
விமான நிலையத்திலிருந்து சபர்மதி (மகாத்மா காந்தி) ஆசிரமம் மற்றும் மோடேரா மைதானம் வரை ஒரு டஜன் சாலைகள் மற்றும் வீதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நகராட்சியும் மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து, நடைபாதைப் பகுதிகள் மற்றும் மின் கம்பங்கள் மற்றும் தூண்களில் வர்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன''.
இவ்வாறு நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் முக்கிய நிகழ்ச்சியான 'சோ டிரம்ப்' (ஹௌடி ட்ரம்ப்) நிகழ்வு நடைபெறும் மோடேரா ஸ்டேடியம் அமைந்துள்ள மோட்டேரா கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்பாளரான ரத்னாபாய் ரபாரி கூறுகையில், "இந்தப் பயணத்தை மேற்கொண்டதற்காக ட்ரம்ப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், இது எங்கள் பகுதியை முற்றிலும் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT