Published : 14 Feb 2020 07:48 AM
Last Updated : 14 Feb 2020 07:48 AM

திருமலையில் விற்பனைக்கு வருகிறது கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள்: பிளாஸ்டிக்கை தடுக்க நடவடிக்கை

திருமலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள கண்ணாடி தண்ணீர் பாட்டில்.

திருமலை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பிளாஸ்டிக்கை அறவே திருமலையில் தடுத்து சுற்றுசூழலை பாதுகாக்கவும் ஓரிரு நாட்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில் விற்பனை திருமலையில் அமல் படுத்தப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தினமும் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், தினந்தோறும் சுமார் 2 லட்சம் பக்தர்களின் போக்குவரத்து திருப்பதி-திருமலை இடையே காணப்படுகிறது. மேலும், வாகன போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால், திருமலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பதி நகரத்தை போன்று, திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகதடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க திருமலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்,பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணி பைகளும், லட்டு கவர்களுக்கு பதில்,அட்டை, துணி பைகளும் புழக்கத்தில் உள்ளன. இதனையும் மீறி பிளாஸ்டிக் பைகளை உபயோகித்தால் அபராதம்விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், திருமலையில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களையும் தேவஸ்தானம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பதில், ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களும் அமைத்தது. ஆனால், பக்தர்களுக்கு இது திருப்திகரமாக இல்லை. தேவைப்படும்போது குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பல இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைதடுக்க, இனி கண்ணாடி குடிநீர் பாட்டில்களை தேவஸ்தானம் திருமலையில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு ஒரு தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள கண்ணாடி தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.20 என நிர்ணயித்துள்ளது. ஆனால் பாட்டிலை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானல் கூடுதலாக ரூ.20 அந்த கடையில் டெபாசிட் செய்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை பக்தர்கள் கொண்டு செல்லலாம். இந்த பாட்டிலை வேறு எந்த கடையில் கொடுத்தாலும், அதற்கு பக்தர் செலுத்திய டெபாசிட் பணம் ரூ.20 அந்த பக்தருக்கு திருப்பி கொடுக்கப்படும். இந்த புதிய திட்டம் ஓரிரு நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.200க்கு கல்யாண லட்டு

பெரிய லட்டு எனப்படும் கல்யாண லட்டு பிரசாதம் இனி அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும் வகையில் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கு இதுவரை இந்த கல்யாண லட்டு பிரசாதம் அதில்பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவசமாகவழங்கப்பட்டு வந்தது. ஆனால் இத்திட்டத்தை கிடப்பில் போட்ட தேவஸ்தானம் தற்போது, கல்யாண லட்டுக்களை வெளியில் விற்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சோதனை அடிப்படையில் கடந்த 2 நாட்களாக திருமலையில் உள்ள லட்டு விநியோக மையங்களில் ஒரு கல்யாண லட்டு ரூ.200க்கு விற்பனை செய்தது. தினமும் 10000 லட்டுகளை தற்போது தேவஸ்தானம் பொது விநியோகம் செய்துவருகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால், இது தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் ஒரு வடைபிரசாதம் ரூ.200க்கும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

கபிலேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமான கபிலேஸ்வரர் கோயிலில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x