Published : 11 Feb 2020 01:44 PM
Last Updated : 11 Feb 2020 01:44 PM
இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லிக்கு நன்றி என்று ஆம் ஆத்மிக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மி கட்சிக்காகப் பணியாற்றினார். தேர்தல் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதையடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லிக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020
தேர்தல் நிபுணர்
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்துக் கொடுப்பதுடன், பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.
பின்னர் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். பின்னர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT