Last Updated : 10 Feb, 2020 05:58 PM

1  

Published : 10 Feb 2020 05:58 PM
Last Updated : 10 Feb 2020 05:58 PM

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: உ.பி. மாநில அமைச்சர் சர்ச்சைக் கருத்து

ரகுராஜ்சிங் | கோப்புப் படம்.

புதுடெல்லி

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில இணை அமைச்சர் ரகுராஜ்சிங் வலியுறுத்தி உள்ளார். இவர் ஏற்கெனவே இதுபோல் கருத்துகள் தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

உ.பி.யின் அலிகரில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது இணை அமைச்சர் ரகுராஜ்சிங் கூறியதாவது:

''இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்கா அணிய முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கு கடந்த வருடம் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியானதே காரணம். இதனால், இந்தியாவிலும் புர்காவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இந்த புர்கா தடையால் தீவிரவாதம் ஒடுக்கப்படும். இதை அணிந்து மறைந்தபடி தீவிரவாதிகள் நம் நாட்டில் நுழைந்து விடுகின்றனர்.

புர்கா அணிந்தவர்கள் சாலைகளில் நடந்தால் அவர்கள் அடையாளங்களைக் கண்டுபிடிக்க முடியாது. சிசிடிவி கேமராக்களிலும் அவர்கள் முகம் தெரியாது.

டெல்லியின் ஷாஹீன்பாக்கில் நடைபெற்றும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் புர்கா அணிந்துள்ளனர். இவர்களுடன் தீவிரவாதிகளும் புர்கா அணிந்து ஊடுருவி விட வாய்ப்புகள் உள்ளன.

எனவே, புர்காவை இந்தியாவில் அணியத் தடை விதிக்கப்பட வேண்டும். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியும், உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியும் இருப்பதால் புர்கா அணியத் தடை செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். இது தொடர்பாக நான் நேற்று கலந்துகொண்ட பிராமண மகாசபாவில் பேசினேன். இந்த புர்காவானது அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரம் ஆகும்.

இதற்கு தீர்த்த யுகத்தில் நல்ல உதாரணம் உள்ளது. அதில் வாழ்ந்த ராமரின் சகோதரர் லக்‌ஷ்மணர் முன் சூர்ப்பனகை தோன்றினார். அவரது மூக்கை லக்‌ஷ்மணர் வெட்டி அனுப்பினார்.

இதனால், அவமானப்பட்ட சூர்ப்பனகை அரேபியாவிற்குச் சென்று மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது தனது கண்களை மட்டும் வெளியில் காட்டி முகத்தை மறைத்துக் கொண்டார். இங்கிருந்து புர்கா அணியும் வழக்கம் உருவானது''.

இவ்வாறு ரகுராஜ்சிங் தெரிவித்தார்.

இதுபோல், சர்ச்சைக்குரிய கருத்துகளை உ.பி. அமைச்சர் ரகுராஜ்சிங் தெரிவிப்பது புதிதல்ல. முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவதாக அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

காவிரி டெல்டா: பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாறுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x