Published : 10 Feb 2020 11:38 AM
Last Updated : 10 Feb 2020 11:38 AM
அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை, இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதுபற்றி விவாதிக்க மக்களவை செயலரிடம் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி., எஸ்டி., இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உத்தரகாண்ட் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி, ரஞ்சித் குமார், பிஎஸ்.நரசிம்மா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை எனக் கோரி மனுத்தாக்கல் செய்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் , துஷ்யந்த் தவே, கோலின் கோன்சால்வேஸ் ஆகியோர் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேபோல எந்த தனிநபரும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவதற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிடுங்கள் என்று மாநில அரசுக்கு நீதிமன்றமும் உத்தரவிட முடியாது.
அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் விருப்பத்தைப் பொறுத்தது. சமூகத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என மாநில அரசு கருதினால் வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கலாம்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதிலும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதிலும் வேண்டுமா அல்லது வழங்கக் கூடாதா என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம், மாநிலஅரசு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கடமையும் இல்லை.
மாநில அரசு சமூகரீதியில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களி்ல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு போதுமான பிரிதிநிதித்துவம் இல்லை என்று தெரியவந்தால், மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால், வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளி்த்தனர்.
இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க மக்களவை செயலரிடம் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தவறவிடாதீர்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் 118 அடி உயர கொடி கம்பம்: விஜயகாந்த் 12-ம் தேதி கொடி ஏற்றுகிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT