Published : 09 Feb 2020 05:55 PM
Last Updated : 09 Feb 2020 05:55 PM
சீனாவுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குப்பின் சென்றுவிட்டு, இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 811பேர் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உயிர்ப்பலியும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.
இந்த பாதிப்பிலிருந்து இந்திய மக்களைக் காக்கும் வகையில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநர்(டிஜிசிஏ) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது
" ஜனவரி 15-ம் தேதிக்குப்பின் சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும், இந்தியாவுக்குள் வரத் தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு சென்றவர்கள், இந்தியா-நேபாளம் எல்லை, இந்தியா-பூடான் எல்லை, இந்தியா-வங்தேச எல்லை, இந்தியா-மியான்மர் எல்லை வழியாக விமானம், நிலப்பகுதி, மற்றும் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் சீன மக்களுக்குப் பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன்பாக இந்தியத் தூதரகம் மூலம் வழங்கப்பட்ட இ-விசா உள்ளிட்ட அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
ஆதலால் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன்பாக விசா பெற்ற சீன மக்கள், வெளிநாட்டவர் யாரும் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு மிகவும் அவசரமான சூழலில் இந்தியாவுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டால், பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஜு ஆகிய நகரங்களில் இருக்கும் இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளலாம். சீன விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அல்லது வேறு வெளிநாட்டு விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த விசா முறை பொருந்தாது "
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT