Last Updated : 18 Aug, 2015 06:44 PM

 

Published : 18 Aug 2015 06:44 PM
Last Updated : 18 Aug 2015 06:44 PM

தேசிய கட்சிகளின் 2013-14 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ.845 கோடி: ஆய்வறிக்கையில் தகவல்

நாம் நாட்டின் ஐந்து தேசிய அரசியல் கட்சிகளின் 2013-14 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் ரூபாய் 844.71 கோடி என தெரிய வந்துள்ளது.

மத்திய தேர்தல் அணையத்தின் உத்தரவின் பேரில் சமர்ப்பிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகமாக ரூபாய் 598.06 கோடி வசூலாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு தொகுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கட்சிகள் அவற்றின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை ஆணையத்துக்கு சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று கூறியிருந்தது.

அதன்படி தேசியக்கட்சிகள் சமர்ப்பித்த 2013-14 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளில் காட்டப்பட்ட வரவு செலவு விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் செய்த ஆய்வில் தொகுக்கப்பட்ட விவரங்கள் வருமாறு:

அவ்வாறு தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை சமர்ப்பித்த ஆறு தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை கணக்குகளை சமர்ப்பித்தன, ஆனால் காங்கிரஸ் கட்சி அறிக்கையை சமர்ப்பித்துடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951இல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டால் அன்றி தேர்தல் ஆணையத்துக்கு இந்த அதிகாரம் கிடையாது என்ற ஆட்சேபணையுடன் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையைசமர்ப்பிக்க பாரதிய ஜனதா கட்சி தனது ஜூலை 9 தேதியிட்ட கடிதத்தில் மேலும் நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளது.

ஐந்து தேசியக் கட்சிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் 2013-14 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ.844.71 கோடியாகும். இவற்றில் காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக ரூ.598.06 கோடி (70.8%), இரண்டாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.121.87 கோடி (14.43%), மூன்றாவதாக பகுஜன் சமாஜ் கட்சி ரூ.66.91 கோடி (7.92%), நான்காவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.55.42 கோடி (6.56%) மற்றும் கடைசியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரூ.2.43 கோடி ((0.29%) எனக் காட்டியுள்ளன.

கூப்பன்கள் விற்பனை, நன்கொடைகள் மூலமாக காங்கிரஸ் கட்சி ரூ.477.316 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ.8.32 கோடி, இவை இரண்டுமாக ரூ.485.64 கோடி (57.49%) இவ்வகையில் வசூலித்துள்ளன. கட்சிகளின் மொத்த நன்கொடைகளில் 41 சதவீதம் ரூ.20,000 -க்கும் மேற்பட்ட நன்கொடைகளாகும். மீதமுள்ள 59% அதாவது ரூ.111.29 கோடி நன்கொடை அளித்தவர்களில் விவரங்கள் இல்லை, இவை கூட்டங்களில் வசூல் போன்ற இதர வகைகளில் வந்தவையாகும்.

2013-14ஆம் ஆண்டு தெரியாத நபர்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு வந்த வருமானம் ரூ.673.08 கோடி அதாவது மொத்த வருமானத்தில் 79.68% ஆகும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த தேசிய அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயக சீர்திருத்த சங்கம் செய்துள்ள பரிந்துரைகள் பின்வருமாறு:

தேசிய அரசியல் அரங்கில் செயல்படும் கட்சிகள் வெளிப்படையான செயல்பாட்டுக்கும் பொறுப்புடைமைக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் பொதுமக்களுக்கு அளிக்கப்படவேண்டும். பூட்டான், நேபாளம், ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இம்முறை உள்ளது. அங்கெல்லாம் இந்தியாவில் உள்ளது போல் 80% நிதியின் ஆதாரம் தெரியாமல் இருக்க முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேசிய, மாநில கட்சிகள் அவர்களது நிதி தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அளிக்கவேண்டும். இதுதான் அரசியல் கட்சிகளையும், தேர்தல் முறையையும், ஜன்நாயகத்தையும் வலுப்படுத்தும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x