Published : 08 Feb 2020 08:00 AM
Last Updated : 08 Feb 2020 08:00 AM

சீனாவில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்ட ‘ஹீரோக்கள்’

சீனாவின் வூஹானில் சிக்கித் தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்த ஏர் இந்தியா விமானிகள்.

புதுடெல்லி

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு சுமார் 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அந்த கல்லூரிகளில் சுமார் 21,000 இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் பெரும்பாலான இந்திய மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறிவிட்டனர்.

வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் அந்த நகரத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பேருந்து, ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அப் போது வூஹான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி கொண்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவ, மாணவியர். அவர்களை மீட்க மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் வூஹான் சென்றது. அதில் 324 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மேலும் 323 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் வூஹானில் இருந்து டெல்லிக்கு திரும்பினர்.

இந்த மீட்புப் பணியை ஏர் இந்தியாவை சேர்ந்த 34 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாக செய்து முடித்தது. மீட்பு குழுவின் தலைவராக கேப்டன் அமிதாப் சிங் செயல்பட்டார். கேப்டன் கமல் மோகன், கேப்டன் சஞ்சய், கேப்டன் ரீஷா, கேப்டன் பூபேஷ் நரேன் ஆகியோர் விமானத்தை இயக்கினர். இந்தியர்களை மீட்டு வந்தது குறித்து அவர்கள் கூறியதாவது:

வூஹானுக்கான முதல் விமானத்தில் 5 விமானிகள், 15 ஊழியர்கள் சென்றோம். 3 டாக்டர்கள், 4 செவிலியர்களும் எங்களுடன் வந்தனர். முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டோம். டெல்லியில் இருந்து 4 மணி நேரத்தில் வூஹானை அடைந்தோம். எங்கள் விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிறகே, வூஹானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் தங்கள் விடுதியை விட்டு வெளியேற சீன அதிகாரிகள் அனுமதித்தனர்.

வூஹான் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விமான நிலையத்தில் மயான அமைதி நிலவியது . பேய் நகரம் போல் வூஹான் காட்சியளித்தது. இந்திய மாணவர்கள் விமான நிலையம் வந்தடைய காலதாமதமானது. அதன்பின் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை என சுமார் 8 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தோம்.

எங்கள் குழுவினர் முதல் வகுப்பிலும் மீட்கப்பட்ட இந்தியர்களை எகனாமி வகுப்பிலும் அமர வைத்தோம். பிப்ரவரி 1-ம் தேதி காலை 7.30 மணிக்கு டெல்லிக்கு வந்தடைந்தோம்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள் முகாமுக்கு சென்றனர். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் வூஹானுக்கு சென்று மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வந்தோம். இந்த மீட்புப் பணி மிகவும் சவாலாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில் சீனாவுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை அனைத்து நாடுகளும் ரத்து செய்துவிட்டன. மத்திய அரசு மிகவும் துணிச்சலாக செயல்பட்டு 2 விமானங்களை அனுப்பி இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளது. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானிகள் உள்ளிட்ட குழுவினரை, நாடு திரும்பிய இந்தியர்கள், ஹீரோக்களாக கொண்டாடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x