Published : 07 Feb 2020 06:04 PM
Last Updated : 07 Feb 2020 06:04 PM
கொடிய கரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக சீனா, மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பொட்டல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய மணிப்பூர், மிஸோரம் அரசுகள் தடை விதித்துள்ளன.
மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் எப்போதோ தயாரிக்கப்பட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் இருப்பதாக அம்மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன.
மணிப்பூர் மியான்மருடன் 398 கி.மீ. சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. எல்லை நகரமான மோரே, இந்தியாவுக்கும் கிழக்கு அண்டை நாடுகளுக்கும் இடையில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்குகிறது.
இதற்கிடையில், ஜனவரி 11-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை சீனா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து மணிப்பூருக்குள் நுழைந்த 172 பேர் தங்களின் இல்லங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் இயக்குநர் (பொது சுகாதாரம்) எல் ஆர்கே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உணவுத் தடை குறித்து மணிப்பூர் மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் உணவு பாதுகாப்பு ஆணையர் கே.ராஜோ சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
"சீனா, மியான்மர் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு உணவுப் பொருளையும் எந்தவொரு நபரும் இறக்குமதி செய்யக்கூடாது, அவை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (இறக்குமதி) விதிமுறைகளுக்கு உட்படவில்லை.
எந்தவொரு நபரும் விற்பனை நோக்கத்திற்காக எந்தவொரு முகவர் அல்லது தரகருக்கும் உற்பத்தி செய்யவோ, விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது வெளிப்படுத்தவோ அல்லது அனுப்பவோ கூடாது.
சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளால் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் குறிக்கப்பட்டு பெயரிடப்படவில்லை.
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனா, மியான்மர் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தயாரிக்கப்படும் எந்தவொரு தொகுக்கப்பட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம் என்று இயக்குநரகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது''.
இவ்வாறு மணிப்பூர் அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதேபோல மியான்மர் எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் சீனப் பொருட்களை குறிப்பாக உணவு மற்றும் துணிகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டதாக ஐஸ்வாலில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT