Published : 07 Feb 2020 05:04 PM
Last Updated : 07 Feb 2020 05:04 PM
பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸின் இளைய சகோதரர் கொச்சி அருகே திரிகாரக்கரா கடற்கரைப் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் (வயது 62). இவர் கொச்சி அருகே திரிகாரக்கரா நகரில் வசித்து வந்தார். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டைவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
ஜஸ்டினின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனது போலீஸிலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கடற்பகுதி அருகே இருக்கும் வள்ளர்பாடம் துறைமுகம் பகுதியில் ஜஸ்டின் உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். ஜஸ்டின் குடும்பத்தினரை வரவழைத்து உடலை அடையாளம் காணச் செய்ததில் இறந்தது ஜஸ்டின்தான் என்பதை அவரின் குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இதையடுத்து, போலீஸார் ஜஸ்டின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். ஜஸ்டின் மர்மமான முறையில் இறந்துள்ளதால், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
ஜஸ்டின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கடந்த சில வாரங்களாக பணப் பிரச்சினையில் ஜஸ்டின் சிக்கி, மன உளைச்சலில் இருந்தார் என்றும், அதனால் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திரிகாரக்கரா அரசு மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஜஸ்டின் உடல் உடற்கூறு ஆய்வு முடிந்து அவர்களின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் வந்தபின், இறுதிச்சடங்கு நடைபெறும் என்று ஜஸ்டின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜஸ்டின் இறந்தது குறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்க அவரின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT