Published : 06 Feb 2020 04:07 PM
Last Updated : 06 Feb 2020 04:07 PM
நாட்டில் முக முக்கியமான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி பேசாமல் மக்களைத் திசை திருப்பும் வகையில் நேரு முதல் பாகிஸ்தான் வரை பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் அடுத்த 6 மாதங்களுக்குள் பிரதமர் மோடியை மக்கள் பிரம்பால் தாக்குவார்கள் என்றார். அது உண்மையாக இருந்தால் மிகவும் கடினம்தான்.
ஆனால், அடிப்பதற்குத் தயாராக 6 மாதம் காத்திருக்க வேண்டுமா? பரவாயில்லை 6 மாதம் நன்றாகத் தயாராகுங்கள். அடுத்த 6 மாதங்களில் நான் சூரியநமஸ்காரம் செய்து என் உடலைத் தயார்படுத்திக் கொள்வேன். முன்கூட்டியே கூறியதற்கு நன்றி. நான் நன்கு உடற்பயிற்சி செய்து தயாராகிவிடுவேன்" எனத் தெரிவித்தார்.
அப்போது ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது, பாஜக எம்.பி.க்கள் குரல் கொடுத்ததால் அமர்ந்தார். அதன்பின் மோடி பேசுகையில், "நான் கடந்த 30 நிமிடங்களாகப் பேசுகிறேன். இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. என்ன செய்வது சில டியூப்லைட் இப்படித்தான் வேலை பார்க்கும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மக்களவையில் இருந்து வெளியேறிய ராகுல் காந்தி வெளியே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதாரப் பிரச்சினையும்தான். ஆனால், அதைப் பற்றி பிரதமர் மோடி பேசவில்லை.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த இந்த நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைதான் தேவை. நான் பிரதமரிடம் தொடர்ந்து கேட்பது ஒன்றுதான். ஒன்றரை மணிநேரம் பேசுகிறீர்கள், 2 நிமிடங்கள் நாட்டின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்துப் பேசுங்கள். உங்கள் அரசு அவர்களுக்காக என்ன செய்துள்ளது என்பது குறித்துப் பேசுங்கள். நீங்களும் பார்த்திருப்பீர்கள், இளைஞர்களும் பார்த்திருப்பார்கள். பிரதமரால் இதற்கு பதில் அளிக்க முடியவில்லை.
மத்திய அரசு பொருளாதாரம் குறித்துப் பேசுகிறது. 5 லட்சம் கோடி டாலர் குறித்துப் பேசுகிறது. ஆனால், நாட்டில் மிகப்பெரிய பிரச்சினைகளைப் பற்றி பேசவில்லை. மாறாக மக்களைத் திசை திருப்பும் வகையில் காங்கிரஸிலிருந்து நேரு வரையிலும் பாகிஸ்தான் முதல் வங்கதேசம் வரையிலும் பேசுகிறார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது குறித்த கேள்விக்குப் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதில் அளிப்பதில் தோல்வி அடைந்துவிட்டார்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
தவறவிடாதீர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT