Last Updated : 06 Feb, 2020 03:26 PM

1  

Published : 06 Feb 2020 03:26 PM
Last Updated : 06 Feb 2020 03:26 PM

டெல்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்குக் கூட இல்லை: அரவிந்த் கேஜ்ரிவால் சவால்

டெல்லியில் பேட்டி அளித்த ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி,

டெல்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்குக் கூட இல்லை என்று மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்குப்பதிவும் நடக்க உள்ளது. 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறது.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் போராடி வரும் கட்சியால் பல்வேறு மாநிலங்களைக் கைப்பற்றிய நிலையில் டெல்லியில் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2013-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலானவை மீண்டும் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது என்பதால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சம்பித் பத்ராவைத் தேர்வு செய்யப் போகிறார்களா அல்லது அனுராக் தாக்கூரை முதல்வராகத் தேர்வு செய்யப்போகிறதா பாஜக? டெல்லியில் முதல்வராக வருவதற்கு பாஜகவில் ஒருவருக்குக் கூடத் தகுதியில்லை.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை வகுப்புவாத மோதலாக மாற்ற பாஜக முயன்றது. ஆனால், அந்த முயற்சிகள் பலிக்குமா அல்லது தோற்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

மக்களுக்கு யார் நல்ல, தரமான கல்வி, மருத்துவ சிகிச்சை, சாலைகள், 24 மணிநேரமும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்தபோது, அந்தச் சாலையை பாஜக சீரமைக்கவில்லை. ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தல்தான் காரணம்.

ஷாகீன் பாக் சாலையை விரிவுபடுத்த அமித் ஷாவுக்குத் தடையாக இருந்தது எது? ஏன் தொடர்ந்து அந்தச் சாலையை அடைத்து வைக்கும் நோக்கத்தில் இருக்கக் காரணம் என்ன? டெல்லி மக்களுக்கு ஏன் பாஜகவினர் இவ்வளவு தொந்தரவு கொடுத்து, மோசமான அரசியலைச் செய்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள், டெல்லியில் வாழும் குடிசை வாழ் பகுதி மக்களை முற்றிலும் மறந்துவிட்டார்கள். இந்த நகரில் உள்ள அங்கீகாரமற்ற குடிசைப் பகுதிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றன.

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இப்போது தொடரும் அனைத்து இலவசத் திட்டங்களும் தொடரும், இன்னும் அதிகமான புதிய திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம்''.

இவ்வாறு கேஜ்ராவில் தெரிவித்தார்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x