Published : 06 Feb 2020 12:57 PM
Last Updated : 06 Feb 2020 12:57 PM
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர வழக்காகத் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் டெல்லி அரசும் முறையீடு செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், "குற்றவாளிகள் 4 பேருக்கும் ஒரே குற்றத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால், தனித்தனியாகத் தண்டனையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை" எனக் கூறி மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ் நேற்று ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்கக் கோரினார். இதையடுத்து, இந்த மனு நீதிபதிகள் என்வி. ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு முன் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT