Published : 06 Feb 2020 09:53 AM
Last Updated : 06 Feb 2020 09:53 AM
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசித்து வருகின்றனர். பிரம்மோற்சவம், ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய நாட்களில் கூடுதலான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம்.
இதனால் பக்தர்கள் தங்குவதற்கு போதிய விடுதிகள் கிடைக்காமல் அவதிப்படும் சூழல் உருவாகிறது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் தரிசனம், விடுதி, போக்குவரத்து, லட்டு பிரசாதம் போன்றவற்றை பெற்று தருகிறோம் என இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இதனை நம்பி அவர்களிடம் பணம் கொடுத்து ஏராளமான பக்தர்கள் ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில், தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர் சில போலி இணைய தளங்களை கண்டறிந்து அவை குறித்து திருமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து போலீஸார் 19 போலி இணையதளங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும், திருமலையில் தங்கும் விடுதிகள், சேவை டிக்கெட்களை பெறவும் போலி இணையதளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT