Last Updated : 06 Feb, 2020 09:51 AM

 

Published : 06 Feb 2020 09:51 AM
Last Updated : 06 Feb 2020 09:51 AM

நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து: க‌ர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.

சாமியார் நித்யானந்தா மீது கடந்த‌ 2010ம் ஆண்டு அவரது சீடர் ஆர்த்தி ராவ் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். இவ்வழக்கில் அதே ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி கைதான நித்யானந்தா 53 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நித்யானந்தாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் கடந்த மாதம், ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவரும் பாலியல் வன்கொடுமை வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார். வ‌ழக்கில் ஆஜராகாமல் இருக்கும் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 1-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘50 முறைக்கும் மேலாக உத்தரவிட்டும் நித்யானந்தா ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் மடங்களின் மூலம் சேவை செய்தால் சட்டத்துக்கு மேலானவர் ஆகிவிடுவாரா? இந்த முறை போலீஸார் அவரை நேரில் சந்தித்து சம்மன் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான‌ விசாரணை அதிகாரி பால்ராஜ், ‘‘பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று விசாரணை நடத்தினேன். அப்போது அவரது உதவியாளர் குமாரி அர்ச்சனான‌ந்தா, நித்யானந்தா ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் தெரியாது எனவும் கூறினார். இதனால் அவரை நேரில் சந்தித்து சம்மனை அளிக்க முடியவில்லை''என தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி குன்ஹா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘‘பாலியல் வன்கொடுமை வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக அவர் சார்பில் பிணை அளித்தவர்களின் ஆவணங்களும் ரத்து செய்யப்படுகின்றன''என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அம்மாநில போலீஸார் வழக்கு பதிந்து தேடியபோது அவர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியோடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு, சர்வதேச போலீஸார் மூலம் நித்யானந்தாவை குஜராத் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x