Published : 05 Feb 2020 05:02 PM
Last Updated : 05 Feb 2020 05:02 PM
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் தங்களின் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் அடுத்த 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், ஒரே குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் ஒரே நேரத்தில்தான் தண்டனை நிறைவேற்ற முடியும். தனித்தனியாகத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த 22-ம் தேதி தூக்கிலிட டெத்வாரண்ட் கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆனால், குற்றவாளிகளில் ஒருவர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ததால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் 14 நாட்களுக்குப் பின் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி கடந்த மாதம் 17-ம் தேதி டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம்.
ஆனால், அப்போதும் குற்றவாளிகளில் ஒருவர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ததால், தண்டனையை நிறுத்தி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்றிட உத்தரவிடக் கோரி நிர்பயாவின் பெற்றோர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறுத்தக்கூடாது. தனித்தனியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் கடந்த வாரத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்ட் இன்று தீர்ப்பு வழங்கினார்
அந்தத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
''ஒரே குற்றத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனித்தனியாகத் தூக்கிலிட முடியாது. ஒரே நேரத்தில்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். ஆதலால், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்.
கடந்த 2017-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துவிட்ட நிலையில், நீண்ட தாமதத்துக்குப் பின் டெல்லி அரசு 2019, டிசம்பர் 18-ம் தேதிதான் தண்டனையை நிறைவேற்றக் கோரியுள்ளது.
குற்றவாளிகள் 4 பேரும் தங்களுக்கு இருக்கும் அனைத்து விதமான சட்ட வாய்ப்புகளையும் இன்னும் 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதன்பின் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். தண்டனையைத் தாமதிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி சட்ட நடைமுறையைக் குற்றவாளிகள் வேதனைப்படுத்தி விட்டார்கள் என்பதை எங்களால் மறுக்க முடியாது''.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தவறவிடாதீர்கள்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT