Published : 05 Feb 2020 03:25 PM
Last Updated : 05 Feb 2020 03:25 PM
பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தில் இன்னும் 5 கோடி விவசாயிகளுக்கு மூன்றாவது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிரதமர் கிசான் உதவித் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் மத்திய வேளாண் துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரதமர் கிசான் உதவித்திட்டம் மூலம் எத்தனை விவசாயிகள் பயன் அடைந்துள்ளார்கள், எத்தனை தவணைகள் பணம் கிடைத்துள்ளது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு வேளாண் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2019-ம் ஆண்டு நவம்பர் வரை நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
இதில் இன்னும் 2.51 கோடி விவசாயிகளுக்குக் கடந்த ஆண்டில் 2-வது கட்டத் தவணைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 5.16 கோடி விவசாயிகளுக்கு இன்னும் மூன்றாவது கட்டத் தவணை வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளில் 84 சதவீதம் அதாவது 7.62 கோடி விவசாயிகள் மட்டும் முதல் கட்டத் தவணையாக ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளனர். 2-வது கட்டத் தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஏறக்குறைய 6.5 கோடி விவசாயிகளுக்கும், மூன்றாவது கட்டத் தவணையாக ரூ.3.85 கோடி விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது
கடந்த 2018, டிசம்பர் முதல் 2019 மார்ச் மாதம் முதல் 4.74 கோடி விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதில் முதல் தவணையை 4.22 கோடி விவசாயிகள் பெற்றுள்ளார்கள். 50 லட்சம் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
2-வது கட்டத் தவணை 4.02 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
மூன்றாவது தவணை 3.85 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 90 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. பணம் பெறாத விவசாயிகளுக்கான மூன்று தவணைகளிலும் சேர்த்து 2 கோடி பேர் இருக்கும் நிலையில், அதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 3.08 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளார்கள். அதில் முதல் தவணை 2.66 கோடி விவசாயிகளுக்கும், 2-வது தவணை 2.47 கோடி பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணையில் 40 லட்சம் விவசாயிகளுக்கும், 2-வது தவணையில் 61 லட்சம் விவசாயிகளுக்கு ஏன் பணம் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இத்திட்டத்தில் பஞ்சாப், மே.வங்கம், சண்டிகர் ஆகிய பகுதிகளில் பதிவு செய்த விவசாயிகளுக்கு எந்தவிதமான முதல் மற்றும் 2-வது கட்ட உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.
பிப்ரவரி 3-ம் தேதி வரை வேளாண் அமைச்சக இணையதளத்தில் உள்ள நிலவரப்படி 8.82 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளார்கள். இதில் 8.41 கோடி விவசாயிகள் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளார்கள், 7.56 கோடி விவசாயிகள் 2-வது தவணையும், 6.19 கோடி விவசாயிகள் 3-வது தவணையும், 3.3 கோடி விவசாயிகள் 4-வது தவணையும் பெற்றுள்ளார்கள்''.
இவ்வாறு ஆர்டிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT