Published : 04 Feb 2020 05:29 PM
Last Updated : 04 Feb 2020 05:29 PM
நாடு முழுவதும் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த தேவையான எந்த ஆயத்தப் பணிகளையும் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்கள் சிஏஏ சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சிஏஏவுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடங்கிய முதல் நாளான நேற்றே மக்களவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவதற்கான எந்தப் பணிகளையும் மத்திய அரசு தொடங்கவில்லை, அதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குடியுரிமைப் பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ இதுவரை விவாதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்
ஆனால், பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், என்ஆர்சி குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.
ஆனால், கடந்த 2019-ம் ஆண்ட ஜூன் 20-ம் தேதி புதிய மக்களவை அமைந்த பின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், " முன்னுரிமை அடிப்படையில் பிரதமர் மோடி அரசு என்ஆர்சியை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இதுபோல இடங்களில் சமூக ஏற்றத் தாழ்வுக்கு காரணமாகவும் இருந்து, வாழ்வாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆதலால், சட்டவிரோதக் குடியேற்றத்தால் பாதிக்கப்படும் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் என்ஆர்சி கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT