Published : 18 Aug 2015 09:56 AM
Last Updated : 18 Aug 2015 09:56 AM
புதிய பேருந்துகளுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பல மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. இவ்வாறு பயன்படுத்தாத நிதியை வட்டியுடன் திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-14-ம் நிதியாண்டில் 18 மாநிலங்களுக்கு மொத்தம் 7,494 பேருந்துகள் வாங்குவதற்காக மத்திய அரசு ரூ.884 கோடி அளித்தது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் இத்தொகை தரப்பட்டது. ஆனால் இதில் அனைத்து மாநிலங்களும் மொத்தம் 2,288 பேருந்துகளை மட்டுமே வாங்கி இருந்தன.
இந்நிலையில் மாநிலங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிதியை வட்டியுடன் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நகர்ப்புற பேருந்துகள் பிரிவின் இயக்குநர் ஆர்.கே.சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு அளித்த தொகை கடந்த ஓர் ஆண்டாக செலவிடப்படாமல் உள்ளது. புதிய பேருந்துகள் தொடர்பாக மாநில அரசு தனது செலவுப் பட்டியலை ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இல்லாவிடில் செலவிடப்படாத தொகையை வட்டியுடன் திரும்பச் செலுத்த உத்தரவிட நேரிடும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் 2013-14-ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு 12,000 பேருந்துகள் வாங்குவதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் தவணையாக 7,494 பேருந்துகளுக்கான விலைப்பட்டியல் பெறப்பட்ட பின், ரூ. 884.21 கோடி அனுப்பி வைக்கப்பட்டது. 18 மாநிலங்களின் 114 நகரங்களுக்காக இத்தொகை அளிக்கப்பட்டது.
இதில் மத்திய அரசிடம் ஓராண்டுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கின்படி, பிஹார் (526 பேருந்துகள்), கோவா (50), மேகாலயா (240), பஞ்சாப் (20), ராஜஸ்தான் (280) சிக்கிம் (41), திரிபுரா (100) ஆகிய 7 மாநிலங்கள் ஒரு பேருந்தை கூட வாங்கவில்லை.
அதிகபட்சமாக 1,691 பேருந்துகளுக்கான தொகையை பெற்ற கர்நாடகா வெறும் 107 பேருந்துகளை மட்டுமே வாங்கியுள்ளது. இதற்கு அடுத்து மகாராஷ்டிரா 1,055 பேருந்துகளுக்கான தொகையில் 183 பேருந்துகளே வாங்கியுள்ளது.
இதுபோல் புதுச்சேரி 50-ல் 10, ஆந்திரா 370-ல் 30, அசாம் 330-ல் 200, இமாச்சலப்பிரதேசம் 790-ல் 522, கேரளா 400-ல் 60, தெலுங்கானா 210-ல் 80 பேருந்து கள் வாங்கியுள்ளதாக செலவுக் கணக்கு அளித்துள்ளன. இவற்றில் யூனியன் பிரதேசமான சண்டீகர் மட்டுமே முழுமையாக 170 பேருந்துகளையும் வாங்கியுள்ளது.
இந்த செலவுக் கணக்குகளை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் அளிக்க வேண்டிய மாநிலங்கள் கடந்த ஓராண்டாக அளிக்கவில்லை.
மேற்கு வங்க அரசு மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் செலவுக் கணக்கை சமர்ப்பித்துள் ளது. இம்மாநிலம் 874 பேருந்து களுக்கான தொகையில் 803 பேருந்துகளை வாங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT