Published : 12 Aug 2015 03:04 PM
Last Updated : 12 Aug 2015 03:04 PM
டெல்லியில் மீண்டும் விருந்து அரசியல் துவங்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார்.
தேசிய அளவில் வரும் சிக்கலான அரசியல் தருணங்கள் மற்றும் தேர்தல் சமயங்களில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் விருந்துகள் வைப்பது உண்டு.
இதில் பலரையும் அழைத்து தமக்கு தேர்தல் மற்றும் அரசியல் சிக்கல்களில் ஆதரவு தேடுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.00 மணிக்கு தனது வீட்டில் தேநீர் விருந்து வைத்துள்ளார். டெல்லியின் ஜன்பத் சாலையின் 6 ஆம் எண் அரசு வீட்டில் நடைபெறவிருக்கும் இந்த விருந்தில் பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தவிர மற்ற அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் எதிரானக் கட்சி என்பதால் பாஜகவும், யாருடனும் அதிக நட்பு வைக்காதவர் என்பதால் மாயாவதியின் பகுஜன் சமாஜும் அழைக்கப்படாததன் காரணம் ஆகும். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் தோழமையுடன் இருந்து அவர்களுக்கு மம்தாவுடன் உள்ள விரோதம் காரணமாக அவர்களும் தவிர்க்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அதன் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாள் ஆகும். இதில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் மற்றும் வெளியுறத் துறை அமைச்சர் ஆகியோர் மீது எழுந்துள்ள ஊழல் புகாரை வைத்து பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்பி இருந்தனர். இதனால், அவை நடவடிக்கைகள் இன்றி நாடாளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது. இந்த பிரச்சனைகளை தொடர்ந்து எப்படி முன் எடுத்து செல்வது என்பது குறித்து இந்த தேநீர் விருந்தில் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் அடுத்து வரவிருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.
இந்த விருந்தில், மூன்று நாள் பயணமாக டெல்லியில் நேற்று முதல் முகாம் இட்டுள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள இருக்கிறார். இவரும், நேற்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லியில் விருந்து அளித்திருந்தார். இதில் தாம் பிரதமர் நரேந்தர மோடியை சந்திக்க இருப்பதாகவும், அவரிடம் எப்படி பேசுவது என கேஜ்ரிவாலிடம் மம்தா யோசனை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT