Published : 29 Jan 2020 03:34 PM
Last Updated : 29 Jan 2020 03:34 PM
பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவரின் கன்னித்தன்மையையும் ஒப்புதலையும் சோதிக்கும் இருவிரல் சோதனை தவறானது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, மேலும் பெண்களின் கண்ணியத்துக்கும் கவுரவத்துக்கு இழுக்கானது என்பதோடு பாதிக்கப்பட்டவரின் அந்தரங்கத்தை மீறும் செயல் என்று குஜராத் உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான வார்த்தைகளால் அத்தகைய சோதனைகளை கண்டித்துள்ளது.
மேலும் இத்தகைய சோதனைகள் நடக்கக் கூடாது என்பதை சட்டம் உறுதி செய்யவும் உத்தரவிட்டது.
25 ஆண்டுகால பழைய வழக்கு விசாரணை இன்று குஜராத் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பார்திவாலா, பார்கவ் காரியா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நீதிமன்றம் ‘இருவிரல் சோதனை’ மூலம் வந்த முடிவை கண்டித்தது.
முன்பு சிறப்பு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை 16க்கும் மேல் என்றும், உறவுக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒப்புக் கொண்டார் என்பதை இருவிரல் சோதனை மூலமும் உறுதி செய்ததையும் கணக்கில் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்தது.
ஆனால் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தவுடனேயே விசாரணை நீதிமன்ற நீதிபதி தன் தவற்றை உணர்ந்தார். அதாவது பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதையும் அவர் வயது தவறாகக் கணக்கிடப்பட்டு மேஜர் என்பதாகவும் பதிவானதை உணர்ந்தார்.
தன் தவற்றை விசாரணை நீதிமன்றம் உணர்ந்திருந்தாலும் தன் தீர்ப்பின் மீது தானே மேல் முறையீடு செய்ய முடியாத தர்மசங்கடத்தில் கோர்ட் சிக்கியிருந்தது. இதனையடுத்து அரசே மேல் முறையீடு மேற்கொண்டது. இதனையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் பெரும் தவறை 25 ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்த உயர்நீதிமன்றம் விடுவித்தவரை குற்றவாளி என்று கூறி அவரை கோர்ட்டில் ஆஜராகப் பணித்தது. ஜனவரி 31ம் தேதி அவர் கோர்ட்டில் ஆஜராகும் போது அவருக்கான தண்டனை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் நீதிபதிகள், “விசாரணை நீதிமன்றங்களும், மருத்துவர்களும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இருவிரல் சோதனை செய்வது மகாக் கொடூரமானது, இந்திய அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உரிமையை மீறும் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது.பெண்ணின் கண்ணியம், கவுரவத்துக்கு இழுக்கு தேடித்தரும் செயலாகும் இது. எனவே விசாரணை நீதிமன்றங்கள் தாங்கள் பெறும் மருத்துவச் சான்றிதழில் இருவிரல் சோதனையினால் சொல்லப்பட்ட கூற்றுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது, என்பதோடு நடவடிக்கையையும் மேற்கொள்வது அவசியம்.
ஏனெனில் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 146க்கு நேர் எதிரான செயலாகும் இந்த இருவிரல் சோதனை. இந்தச் சோதனையே அறிவியல்பூர்வமற்றது இதற்கு தடயவியல் மதிப்பு எதுவும் கிடையாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள்.
பாலியல் பலாத்காரத்துக்கு முன்பு ஒரு பெண் பாலியல் உறவு வைத்திருந்தாரா என்பதை அறிவது எந்த விதத்திலும் பலாத்கார வழக்கில் தொடர்புடையதாகாது. ஆகவே பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவரின் சம்மதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் 155ம் பிரிவின் படி பலாத்கார பாதிப்புப் பெண்ணின் நேர்மையை சந்தேகிக்க முடியாது. அதாவது அந்தப் பெண் பொதுவாகவே ஒழுக்ககேடானவள் என்று கூறுவதன் மூலம் பலாத்கார பாதிப்புப் பெண்ணின் நேர்மையை நாம் சந்தேகிக்க முடியாது, சட்டம் அதனை அனுமதிக்கவில்லை” என்று கூறி இருவிரல் சோதனையை கடுமையாகக் கண்டித்தது.
ஜனவரி 31ம் தேதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராகும் போது அவருக்குத் தண்டனை உறுதி செய்யப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT