Published : 21 Aug 2015 08:41 AM
Last Updated : 21 Aug 2015 08:41 AM

50 ஆண்டுகளில் காங்கிரஸ் சாதித்தது என்ன?- மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு

சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகாலம் நமது நாட்டை ஆண்டுள்ளது. ஆனால் இதன் மூலம் காங்கிரஸ் என்ன சாதித்தது, என மத்திய நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடத்தில் நேற்று மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ஸ்மிருதி இராணி, சுஜனா சவுதரி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் என்.ஐ.டி தொழிற் கல்வி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

இந்த விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சுதந்திரம் வந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி சுமார் 50 ஆண்டு காலம் நமது நாட்டை ஆண்டுள் ளது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. எந்தவித வளர்ச்சியும் இல்லை. தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆந்திர மாநில பிரிவினை நடைபெற்றது. ஆந்திராவுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயமாக நிறைவேற்றப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் சில அரசிய‌ல் கட்சிகள் இதனை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கின்றன.

பிரதமர் மோடி குறித்து சிலர் தேவையில்லாமல் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவே வேலையாகி விட்டது. இத்தனை நாட்கள் ஆட்சியில் இருந்து பதவி போன பின்னர், அந்த வேதனையில் பேசுகின்றனர் என்பது எங்களுக்கு நன்றாக புரிகிறது. மோடி குறித்து பல நாடுகள் புகழ்ந்து பேசுகின்றன‌. ஆனால் இங்குள்ள சில கட்சியினருக்கு அது வேதனையை அளிக்கிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தை நாட்டிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற தீவிரம் காட்டி வருகிறார். அவரது உழைப்பை காணும்போது அது விரைவில் நிறைவேறும் என நம்பு கிறேன். சிலர் நான் ஆந்திராவில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுகின்றனர். நான் ஆந்திராவுக்கு வந்தால் சில வளர்ச்சி பணிகள் நடக்கும். இல்லையேல் எதுவும் நடக்காது என்பது என்னை விமர்சித்தவர்களுக்கே தெரியும்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு புதிய மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அரசியலில் மக்கள் ஆதரவு தேவை, வாரிசு அடிப்படையில் நீண்ட காலம் யாரும் அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது. இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

ரூ.700 கோடியில் ஐஐடி

இவ்விழாவில் கலந்து கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தை கல்வித் தரம் வாய்ந்த மாநிலமாக உருவாக்க வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு கருதுகிறார். அதற்கு தகுந்தவாறு இங்கு தற்போது தாடேபல்லி கூடத்தில் என்.ஐ.டி மேற்கல்விக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதியில் ரூ.700 கோடி செலவில் அமைக்கப்படும் ஐஐடி கல்வி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுதவிர, விசாகப்பட்டினத்தில் ரூ.680 கோடி செலவில் ஐஐஎம் கல்வி மையமும் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x