Published : 28 Jan 2020 04:06 PM
Last Updated : 28 Jan 2020 04:06 PM
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி இருக்கும் நிலையில், வுஹான் மாநிலத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பூர்வாங்கப் பணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
450-க்கும் மேற்பட்ட பயணிகளைச் சுமந்து செல்லக்கூடிய ஏர் இந்தியாவின் ஜம்போ விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், எந்நேரமும் சீனாவுக்கு விமானம் புறப்பட்டுச் செல்லும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் மத்தியப் பகுதியான வுஹான் நகரை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை சீனாவில்100-க்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளையும் இந்த கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
கரோனா வைரஸில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடும், தங்களின் விமான நிலையங்களில் தீவிரமான சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதித்து வருகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சீனாவில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் கடந்த சில நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வுஹான் நகரிலேயே சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வுஹான் நகரில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்களையும், இந்தியர்களையும் மீட்கும் பணியைச் சீன அதிகாரிகளுடன் சேர்ந்து மத்திய வெளியுறவுத்துறை தொடங்கியுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடிய வகையில் ஏர் இந்தியாவின் ஜம்போ ரக விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த விமானம் சீனா புறப்படும் எனத் தெரிகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு சீன அதிகாரிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படும் மாணவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய, மும்பை விமான நிலையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியர்களை மீட்கும் விவகாரத்தில் இந்தியத் தூதரகம், சீனத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. ஹூபி மாநிலத்தில் கரோனா வைரஸில் சிக்கி இருக்கும் இந்தியர்கள், மாணவர்களை மீட்கும் பணிகளை இந்திய அரசு தொடங்கிவிட்டது.
இந்திய அதிகாரிகளும், சீன அதிகாரிகளும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள். அடுத்தடுத்து வரும் செய்திகள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT