Published : 27 Jan 2020 05:42 PM
Last Updated : 27 Jan 2020 05:42 PM
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் அத்னன் சமிக்கு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை வழங்கப்பட்டு, அவருக்கு இப்போது பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது 130 கோடி இந்தியர்களைப் புண்படுத்தும் செயல் என்று என்சிபி கட்சி தெரிவித்துள்ளது.
கார்கில் போரில் தேசத்துக்காகப் பங்கேற்று விருது பெற்று தற்போது அசாமில் என்ஆர்சி மூலம் வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முகமது சனானுல்லாவுக்கு ஏன் பத்மஸ்ரீ வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இரு கட்சிகளுக்கும் பாஜக சார்பில் பதிலடியும் தரப்பட்டுள்ளது.
71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 118 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.இதில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரும், லண்டனில் பிறந்தவருமான பாடகர் அத்னன் சமிக்கு இந்த முறை பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த அத்னன் சமிக்கு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை வழங்கப்பட்டது. அத்னன் சமியின் தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளன.
என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக் ட்விட்டரில் கூறுகையில், " பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருதை பாடகர் அத்னன் சமிக்கு வழங்கியது 130 கோடி இந்தியர்களை அவமானப்படுத்துவதாகும். நம்நாட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கவுரவத்துக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிஏஏ,என்ஆர்சி, என்பிஆர் விவகாரத்தில் உலகம் முழுவதும் மக்கள் எழுப்பும் கேள்வியால் அடையும் சேதாரத்தைத் தவிர்க்கவே என்டிஏ அரசு அத்னனுக்கு விருது வழங்கியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பிரதமர் மோடியைப் புகழ்ந்தால் அவர்கள் குடியுரிமையோடு, பத்மஸ்ரீ பட்டமும் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் நிருபர்களிடம் கூறுகையில், " கார்கில் போரில் இந்தியாவுக்காகப் போர் புரிந்தவரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான முகமது சனானுல்லா அசாம் மாநில என்ஆர்சியில் வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டார். ஆனால் அத்னன் சமியின் தந்தை பாகிஸ்தான் ராணுவத்தில் இந்தியாவுக்கு எதிராக போர் புரிந்தவர். ஆனால், அத்னன் சமிக்கு அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இதுதான் என்ஆர்சியின் மாயாஜாலம், அரசை முகஸ்துதி பேசுபவருக்குக் கிடைக்கும் பரிசு.
இந்திய ராணுத்தில் பணிபுரிந்து நாட்டுக்காகப் போர்புரிந்த சனானுல்லாவை வெளிநாட்டவர் என்று சொல்லிவிட்டு, பாகிஸ்தான் விமானப்படை அதிகாரியின் மகனுக்கு பத்மஸ்ரீ விருது ஏன் வழங்கினீர்கள். இதுதான் புதிய இந்தியாவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதற்கு என்சிபி, காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பாஜக சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தந்தை இத்தாலி சர்வாதிகாரி முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லருக்கு நெருக்கமானவராக இருந்தார். அப்படியென்றால் சோனியா காந்திக்கு எவ்வாறு குடியுரிமை அளிக்கப்பட்டது. அத்னன் சமி பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர். அதனால்தான் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT