Published : 24 Aug 2015 10:57 AM
Last Updated : 24 Aug 2015 10:57 AM
ஆந்திர மாநிலத்தில் நேற்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கிரானைட் சுமையேற்றிய லாரி மோதியது. இதில் கிரானைட் கல் ரயில் பெட்டி மீது விழுந்ததில் ரயிலில் பயணம் செய்த கர்நாடக எம்எல்ஏ உட்பட 5 பேர் இறந்தனர்.
பெங்களூரு மும்பை இடையிலான நாந்தேட் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று அதிகாலை 2.25 மணி அளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டா அடுத்துள்ள மடகசீரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் இருந்த லெவல் கிராசிங் கேட் மீதும் பிறகு ரயில் மீதும் கிரானைட் சுமையேற்றிய லாரி ஒன்று மோதியது.
இதில் மிகப்பெரிய கிரானைட் கல், ரயிலின் எஸ்-1 ஏசி பெட்டி மீது விழுந்தது. இதனால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் தேவதுர்கா தொகுதி எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வெங்கடேஷ் நாயக் (82) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இதே பெட்டியில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த ராஜா, ராய்ச்சூரை சேர்ந்த புல்லாராவ், ரயில்வே ஏசி மெக்கானிக் அகமது ஆகிய 3 பேரும் லாரி கிளீனர் நாகராஜும் உயிரிழந்தனர். இதுதவிர 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு தென்மத்திய ரயில்வே இயக்குநர் அஜீத் குமார், ஆந்திர அமைச்சர் பரிடால சுனிதா, அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சசிதர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், மீட்புப் படையினர் விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடி யாக பெங்களூரு, புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரயில் பயணிகள் அருகில் உள்ள ஊர்களுக்கு 22 பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம் வரை மீட்புப் பணிகள் நடைபெற்றதால், பெங்களூரு-ஹைதராபாத் இடையே ரயில்போக்குவரத்து தடைபட்டது.
இதனால் இந்த தடத்தில் 32 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பப்பட்டன. 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி அனந்தபூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். பெனுகொண்டா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT