Published : 26 Jan 2020 07:00 AM
Last Updated : 26 Jan 2020 07:00 AM
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு மத்திய தேர்தல் ஆணையத்தின் விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நேற்று வழங்கினார். நாளேட் டின் ஆசிரியர் கே.அசோகன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த 1950 ஜனவரி 25-ம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல், ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியான வர்களைக் கண்டறிந்து அவர்களை வாக் காளர் பட்டியலில் சேர்த்து அடையாள அட்டை வழங்குவதும், தேர்தல் நாட்களில் வாக்களிக்கத் தூண்டுவதும் வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த செய்திகளை ஆண்டு முழுவதும் வெளியிட்டு, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் ஊடகங்களுக்கு வாக்காளர் தினத்தில் மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அச்சு, தொலைக்காட்சி, இணையதளம், வானொலி ஆகிய நான்கு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு விருதுக்குரிய ஊடகங்களை தேர்வு செய்கிறது.
மேலும் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த களத்தில் பணியாற்றிய சமூக நல அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் 20 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இதில் அச்சு ஊடக பிரிவில் ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ் திசை’ நாளேடு தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதல் தமிழ் நாளேடு
டெல்லியில் நேற்று நடைபெற்ற 10-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். அப்போது அச்சு ஊடகப் பிரிவில் ‘இந்து தமிழ் திசை' நாளேட்டுக்கு தேசிய விருதை அவர் வழங்கினார். நாளேட்டின் ஆசிரியர் கே.அசோகன் விருதினைப் பெற்றுக் கொண்டார். விழாவில் ‘இந்து தமிழ் திசை'யின் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி. சுப்பிரமணியம், விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
மத்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த முறை நாடு முழுவதும் அனைத்து மொழிகளின் அச்சு, மின்னணு ஊடகங்களுக்கு மொத்தம் 2 விருதுகள் மட்டுமே அளிக்கப்பட்டன. அச்சு ஊடகத்துக்கான விருதை ‘இந்து தமிழ் திசை' பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய வாக்காளர் தின விருதை பெறும் முதல் தமிழ் நாளேடு என்ற பெருமையை ‘இந்து தமிழ் திசை’ பெற்றுள்ளது.
சிறப்பு விருதுகளின் பிரிவில், கணக்கு களை தணிக்கை செய்த மத்திய வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் மது மஹாஜன், அதன் புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குநர் பி.முரளி குமார் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். ஐ ஆர் எஸ் குடிமைப்பணியில் இருந்த இருவரும் தமிழகத்தின் சிறப்பு பார்வையாளர்களாக செய்திப் பணியின் சாதனைக்காக விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
நூல் வெளியீடு
விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய தேர்தல் ஆணையத்தின் 2 நூல் களை வெளியிட்டார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா, செக்ரடரி ஜெனரல் உமேஷ் சின்ஹா, டைரக்டர் ஜெனரல் தர்மேந்திரா சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், கஜகஸ்தான், மாலத்தீவுகள், மொரீ ஷியஸ், நேபாளம், இலங்கை நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT