Published : 25 Jan 2020 06:05 PM
Last Updated : 25 Jan 2020 06:05 PM
அழுக்கு, மோசமான அரசியலின் ஒரு பகுதியாகக் கல்வியை மாற்றாதீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைக்கும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் தங்களின் 5ஆண்டுக்கால சாதனைகளையும், திட்டங்களையும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்
பாஜக, டெல்லியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அரவிந்த் கேஜ்ரிவாலின் நிர்வாகச் சீர்கேட்டையும் குறைகூறி பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், " டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் 500 பள்ளிக்கூடங்கள் கட்டுவேன் என்று உறுதியளித்திருந்தார். பள்ளிக்கூடங்களும் கட்டவில்லை, ஏற்கனவே இருக்கும் பள்ளிக்கூடங்களும் மோசமான நிலையில் இருக்கின்றன.
700 பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்களே இல்லை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் குறித்த சோதனைக் கூடங்கள் இல்லை, 19 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். கேஜ்ரிவால் அரசுக் கல்விக்காக பட்ஜெட்டில் 30 சதவீதம்கூட செலவிடமுடியவில்லை" என விமர்சித்திருந்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் விமர்சனத்துக்குப் பதிலடி தரும்வகையில் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.அதில், " உங்களின் மோசமான அரசியலின் ஒரு பகுதியாகக் கல்வியை மாற்றாதீர்கள். தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி என்னுடன் வந்து அரசுப் பள்ளிகளைப் பாருங்கள். உங்களைச் சுற்றி எதிர்மறையான எண்ணம் நாடுமுழுவதும் சூழ்ந்துள்ளது.
என்னுடன் வந்து எங்கள் மாணவர்களைச் சந்தித்துப் பேசுங்கள். அப்போது உங்களுக்கு நேர்மறையான எண்ண அலைகள், எண்ண ஓட்டங்கள் கிடைக்கும். கல்வியில் தயவு செய்து ஆக்கப்பூர்வமான, நேர்மறையான அரசியலை நடத்துங்கள். டெல்லி அரசுப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கடின உழைப்பை விளையாட்டாகச் சித்தரிக்காதீர்கள் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT