Published : 23 Jan 2020 05:22 PM
Last Updated : 23 Jan 2020 05:22 PM
காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். இதில் மூன்றாவது நாடு தலையீட்டை விரும்பவில்லை என்று இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் வார்த்தைகளைச் செவிமடுக்காமல், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுக்கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். இதற்கு நேரடியாக இந்தியா சார்பில் பதில் அளிக்காவிட்டாலும், மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி தன்னிடம் மத்தியஸ்தம் செய்ய உதவி கோரினார் என்று கூறி, அதிபர் ட்ரம்ப் சிக்கலில் மாட்டிக்கொண்டார். ஆனால், அவ்வாறு பிரதமர் மோடி எந்தவிதமான உதவியும் கோரவில்லை என்றும் இந்தியா தரப்பில் பதிலடி தரப்பட்டது. சில மாதங்கள் அமைதியாக இருந்த ட்ரம்ப் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தைப் பேசியுள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சந்தித்துப் பேசினர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக இம்ரான் கானிடம் தெரிவித்ததாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு அனுமதிக்கமாட்டோம்.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் பரப்பிவிடும் தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை முற்றிலும் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம். சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தத்தின்படி இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்'' என்று ராவேஷ் குமார் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT