Published : 22 Jan 2020 04:58 PM
Last Updated : 22 Jan 2020 04:58 PM
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பெண் ரோபாவை ஆளில்லா விண்கலத்தில் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த பெண் ரோபோவுக்கு இஸ்ரோ வைத்துள்ள பெயர்தான் 'வியோமமித்ரா'. சமஸ்கிருதத்தில் 'வியோம' என்றால் விண்வெளி என்றும், 'மித்ரா' என்றால் தோழி என்றும் அர்த்தம். இரண்டையும் ஒன்றாக இணைத்து 'வியோமாமித்ரா' என்ற பெயர் வைத்துள்ளது இஸ்ரோ
ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தும் முன் இஸ்ரோ 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஆளில்லா விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆளில்லா விண்கலமும் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த ஆளில்லா விண்கலத்தில் இந்த பெண் ரோபோவான வியோமமித்ரா அனுப்பப்பட உள்ளது.
மனிதர்களின் விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வுகள் தற்போதுள்ள சவால்கள் எதிர்காலத் தேவைகள் என்ற தலைப்பில் பெங்களூருவில் இன்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பெண் ரோபோவான வியோமமித்ரா அறிமுகம் செய்யப்பட்டது.
வியோமமித்ராவை அரங்கில் அறிமுகம் செய்துவைத்தவுடன் அனைவரும் வியப்படைந்தனர். ரோபோ வியாமமித்ராவே தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
" அனைவருக்கும் வணக்கம், நான்தான் வியோமமித்ரா, ககன்யான் திட்டத்துக்காக நான் தயாரிக்கப்பட்டுள்ள மனித ரோபோ" என வியோமமித்ரா ரோபோ தெரிவித்தது.
தனது பணிகள் குறித்து வியோமமித்ரா கூறுகையில், " மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்" எனப் பதில் அளித்தது.
இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் இந்த மனிதரோபோவான வியோமமித்ரா குறித்துக் கூறுகையில், " விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டைத் தூண்டிவிடும் வகையில் இந்த ரோபோ செயல்படும், அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கட்டுப்படுத்தும் உயிர்காக்கும் முறையோடு தொடர்பு கொள்ளும் . விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டை இந்த ரோபோ தூண்டிவிட்டு, செயல்பாட்டு முறை சரியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT