Published : 22 Jan 2020 12:00 PM
Last Updated : 22 Jan 2020 12:00 PM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜக, காங்கிரஸில் வலுவான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவ்விரு கட்சியிலும் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதற்கு மாறான வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8 இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலின் புதுடெல்லி தொகுதி.
இங்கு 2013 தேர்தலில் முதன்முறையாகப் பேட்டியிட்ட கேஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறை முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார். பிறகு 2015 இல் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸின் பலம்வாய்ந்த தலைவரான கிரண் வாலியாவை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகிறது. அதேபோல், மக்களவை தேர்தலில் அதன் ஏழு தொகுதிகளையும் வென்ற பாஜகவும் ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டுகிறது.
இதனால், இரண்டு கட்சிகளின் சார்பிலும் கேஜ்ரிவால் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் வலுவான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்காக, பாஜக சார்பில் புதுடெல்லி அமைந்த மக்களவை தொகுதியின் எம்.பியான மீனாட்சி லேகி, ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறும் நிலையில் அதிருப்தி காட்டிவரும் இந்தி கவிஞரான குமார் விஸ்வாஸ், மறைந்த பாஜக மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான சுஷ்மா ஸ்வராஜின் மகள் உள்ளிட்ட பலரது பெயர் பேசப்பட்டு வந்தது.
இதேபோல், காங்கிரஸில் மறைந்த ஷீலா தீட்சித்தின் மகளான லத்திகா போட்டியிடுவதாகவும் செய்திகள் உலவின. எனினும், தற்போது இரண்டு கட்சிகள் சார்பிலும் முதன்முறையான போட்டியில் இளம் சமூதாயத் தலைவர்கள் போட்டியிட வைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக சார்பில் தனது இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் டெல்லி மாநிலத் தலைவரான சுனில் யாதவ் என்பவரை அறிவித்துள்ளது. வழக்கறிஞரான சுனிலின் ட்விட்டர் பக்கத்தை வெறும் 16,300 பேர் தொடர்கின்றனர்.
தனது மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ரொமேஷ் சபர்வாலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாகக் காங்கிரஸில் இருந்தாலும் அதன் மூத்த தலைவர் அஜய்மக்கனுக்கு எதிர்கோஷ்டியில் உள்ளார்.
இவ்விரு வேட்பாளர்களும் வலுவானவர்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜின் ட்விட்டர் பக்கக் குறிப்பு உள்ளது.
இதில் பரத்வாஜ், ‘முதல் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்க்கும் இரண்டு கட்சி வேட்பாளர்களை பார்த்தால் பாஜக, காங்கிரஸ் 70/70 என அனைத்து தொகுதிகளிலும் சரணடைந்து விட்டது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புதுடெல்லி தொகுதியில் நடைபெறும் தீவிரப் பிரச்சாரத்தை பொறுத்தும், கேஜ்ரிவாலின் வெற்றி நிலையில் மாற்றம் வரலாம் எனவும் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் அதன் முக்கியத் தலைவர்கள் புதுடெல்லி தொகுதியில் பிரச்சாரம் செய்வது குறித்து தகவல் இன்னும் இல்லை. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சுமார் 15 நாட்கள் மட்டுமே தீவிரப் பிரச்சாரத்திற்கான அவகாசம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT