Published : 15 Jan 2020 02:59 PM
Last Updated : 15 Jan 2020 02:59 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது. இவற்றுக்கு அங்கு ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குறி வைத்துள்ளன.
டெல்லியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம் வாக்குகளைத் தொடர்ந்து காங்கிரஸ் பெற்று வருகிறது. எனினும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக முஸ்லிம் வாக்குகள், புதிதாகத் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றன. இதனால், அக்கட்சி தனி மெஜாரிட்டியுடன் வென்று அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வரானார்.
இந்த வாக்குகள் அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் கிடைத்தன. இதனால், வாக்குகள் பிரிந்து பாஜக பலன் பெற்றதாகக் கருதப்பட்டது.
இதன் விளைவாக காங்கிரஸ் ஐந்தும், மீதியுள்ள இரண்டில் ஆம் ஆத்மி கட்சியும் இரண்டாவதாக வந்தன. அனைத்து ஏழு தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. இப்போது, மீண்டும் பிப்ரவரி 8-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் யாருக்கு விழும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஏனெனில், டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறிப்பாக மத்திய அரசின் சிறுபான்மை பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அதைச் சுற்றி முஸ்லிம்கள் வாழும் ஷாஹீன்பாக் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது.
இதில் டெல்லி தேர்தல் நடைபெறும் நிலையில் முஸ்லிம் வாக்குகளைக் குறி வைத்து காங்கிரஸ், தன் தலைவர்களைப் போராட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் எவரும் இந்தப் போராட்டக் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, இந்தத் தேர்தலிலும் முஸ்லிம்கள் வாக்கு பிரியும் ஆபத்து நிலவுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''தலித் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சுமார் 49 சதவீதம் வாக்குகள் டெல்லியில் உள்ளன. இதனால், மீதமுள்ள 51 சதவீத வாக்காளர்களை மட்டும் குறி வைக்கும்படி எங்கள் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு 49 சதவீதம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே பிரிந்து அது எங்களுக்கே பலன் தரும் என்ற எதிர்பார்ப்பு காரணம்'' எனத் தெரிவித்தனர்.
டெல்லியின் மத்தியா மஹால், பலிமாரன், ஓக்லா, சீலாம்பூர், பாபர்பூர், வசீர்பூர், துக்ளக்காபாத் மற்றும் முஸ்தாபாபாத் ஆகிய தொகுதிகளில் முஸ்லிம்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.
மேலும், திமார்பூர், திரிலோக்புரி, காந்தி நகர், ஷகூர்பஸ்தி மற்றும் சதர்பசார் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாகவும் வாழ்கின்றனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், முஸ்லிம் வாக்குகள், ஆம் ஆத்மி, காங்கிரஸ், அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக, மத்திய அரசு, குடியுரிமைச் சட்டத் திருத்தம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT