Published : 09 Jan 2020 01:26 PM
Last Updated : 09 Jan 2020 01:26 PM
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விவாதிக்க டெல்லியில் சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது, நாங்கள் தனித்தே போராடுவோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குடியுரிமைச் சட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தநிலையில் திடீரென காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது அவர் தாக்குதல் தொடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம் போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடந்த முழுஅடைப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையை ஏற்க முடியாது. இடதுசாரிகளும், காங்கிரஸும், குடியுரிமைச் சட்டத்தை வைத்து மேற்குவங்கத்தில் மிகமோசமான அரசியல் செய்கிறார்கள். இதனை அனுமதிக்க முடியாது. வரும் 13-ம் தேதி குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விவாதிக்க டெல்லியில் சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது. நாங்கள் தனித்தே போராடுவோம்’’ என பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT