Published : 08 Jan 2020 03:18 PM
Last Updated : 08 Jan 2020 03:18 PM
முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் இடதுசாரிக் கட்சிகள் வன்முறையில் ஈடுபடுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. அதுபோலவே அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன.
குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டத்தின்போது சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. மேலும் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை இல்லை. அரசியல் போராட்டத்தின் பெயரில் ரயிவே தண்டவாளத்தில் வெடிகுண்டை வைக்கின்றனர். ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இது ஜனநாயக முறையிலான போராட்டம் அல்ல. தாதாயிசம். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு முன்பாகவும் அவர்கள் அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்தை நான் ஏற்கவில்லை. விளம்பரத்துக்காக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கின்றனர். பேருந்துகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற செயலை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT