Published : 08 Jan 2020 11:06 AM
Last Updated : 08 Jan 2020 11:06 AM
ஈரான், அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில் ஈரான், இராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முக்கிய படைத் தளபதியான இஸ்லாமிய புரட்சிகரப் படையின் கமாண்டர் காசிம் சுலைமானை கடந்த 3-ம் தேதி அமெரிக்கா பாக்தாத்தில் ஆள் இல்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் அரசு, அமெரிக்காவின் செயலுக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம், பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தது.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தாங்கள் அதிகமான அளவில் உள்கட்டமைப்புக்குச் செலவு செய்துவிட்டதால் அதற்கான இழப்பீடு வழங்கினால்தான் வெளியேறுவோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் சார்பில் இராக்கில் உள்ள அமெரிக்காவின் இரு விமானப்படைத் தளங்கள் மீது இன்று அதிகாலை 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல் விவரம் குறித்து முழுமையான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அங்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட் சேதம் குறித்து அமெரிக்கா இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் ஈரான், இராக் வளைகுடா பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை ஈரான் தாக்கி இருப்பதால், அடுத்ததாக அமெரிக்கா சார்பில் நிச்சயம் பதிலடி தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான், இராக் வான்வெளி பதற்றமானதாக மாறி இருப்பதால், இந்திய விமானங்கள் அந்த வான்வெளியைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஈரான், இராக்கில் பதற்றமான சூழல் நிலவுவதால், இந்திய விமானங்கள் இருநாடுகளின் வான்வெளியில் பறப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அவசியம் ஏற்பட்டால் இன்று ஈரான், இராக் நாடுகளுக்குச் செல்வதை மறு அறிவிப்பு வரும்வரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேசமயம் இராக்கில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும், இராக்கில் எந்த நகரத்துக்கும் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாக்காத், ஈரிபில் நகரங்களில் இருக்கும் இந்தியத் தூதரகம் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இராக்கில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT