Published : 07 Jan 2020 01:26 PM
Last Updated : 07 Jan 2020 01:26 PM
ஜேஎன்யுவில் நடந்த மோதல்கள், வன்முறையை கண்டித்து அகமதாபாத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும் ஏபிவிபி அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜகவின் ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜேஎன்யு வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி அமைப்பினர் அலுவலகம் அருகே திரண்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது ஏபிவிபியை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
#WATCH Clash between ABVP and NSUI workers in Ahmedabad, Police resorted to lathi charge to disperse the crowd. NSUI was protesting near ABVP officer over #JNUViolence when clash broke out. Around 10 people injured. (note: abusive language) #Gujarat pic.twitter.com/R7vvvYiit5
— ANI (@ANI) January 7, 2020
இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT