Published : 06 Jan 2020 10:18 AM
Last Updated : 06 Jan 2020 10:18 AM

நிலுவைகளின் தேசமா இந்தியா..?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஒரு புதிய சாதனையை நோக்கி நமது நாடு விரைந்து கொண்டு இருக்கிறது. வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள வருமான வரித் தொகை பத்து லட்சம் கோடியை தாண்டி விட்டது. மொத்த நிலுவைத் தொகை ரூ 11,14,182 கோடி. இதில், வசூலிக்கக் கடினம் என்று வகைப்படுத்தப்பட்டது ரூ 10,94,023 கோடி. அதாவது 98%க்கும் மேல்!

வரிப் பிடித்த தொகையில் வேறுபாடு, வரி செலுத்துவோரின் இருப்பிடம் கண்டுபிடிக்க இயலாமை என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனாலும், மிக முக்கிய காரணம் - வழக்குகள். ஆனால், வரி விதிப்புக்கு முன்னரே, ‘கள நிலவரம்'அறிந்து, யதார்த்தமான வரி மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தால், பெரும்பாலான வழக்குகளுக்கு தேவையே இருந்து இருக்காது.

உறுதியாகக் கணிக்க முடிந்த வருமானத்தை மட்டுமே வரி விதிப்புக்கு உட்படுத்த வேண்டும்; சந்தேகத்தின் பேரில், யூகங்களின் அடிப்படையில், ‘கள நிலவரம்' அறியாது, ‘காகிதங்களை' மட்டும் வைத்துக் கொண்டு, வலிந்து கூட்டப்படுகிற வருமானத்தால், வழக்குகளும் செலுத்தப்படாத தொகைகளும் நாளுக்கு நாள் கூடவே செய்யும். உறுதியாகத் தெரிந்த வரி செலுத்துவோரிடம், உறுதியாகத் தெரிந்த வருமானத்தின் மீது, வரி விதித்தால், வசூல் செய்கிற வாய்ப்புகள் மிக அதிகம்.

யதார்த்தமற்ற வரி மதிப்பீட்டில், வரி செலுத்துவோரின் விலாசம் கூடத் தெரியாமல், வரி எழுப்பினால், முட்டுச் சந்தில் போய் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியதுதான்.

வரித் துறைக்கு, வரி மதிப்பீட்டு அலுவலருக்கு இது தெரியாதா என்ன..? இருந்தும், இந்தத் தவறு தொடர்ந்து நிகழக் காரணம்..? சட்டப்படி வரிக்கு உட்பட வேண்டிய வருமானம், விடுபட்டு விடக் கூடாது என்கிற எண்ணம்தான். அரசு வருவாய் நோக்கில் இது சரியான அணுகு முறைதான். ஆனால், வசூல் ஆவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்கிற கோணமும் முக்கியம்தானே..? வருமானம் விடுபட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் அதனை உறுதிப் படுத்த, போதுமான ஆதாரங்கள் இல்லை அல்லது போதுமான கால அவகாசம் இல்லை.

மதிப்பீட்டு அலுவலர் என்ன செய்ய வேண்டும்? முறைப்படுத்தப்பட்ட சீரான வழிமுறைகள் இல்லை. வருமான வரி ஏய்ப்பு, பிற குற்றங்களைப் போல எளிதில் கண்டுபிடிக்க முடிகிற ஒன்றல்ல. பல சமயங்களில் வரி மதிப்பீட்டுப் பணி, இலக்கின்றி பயணிக்கிற வகையாகவே இருத்தல் கூடும்.

ஏதேனும் தவறு நடந்து இருக்கிறதா என்பதே கூடத் தெரியாத நிலையில், கண்ணை மூடிக் கொண்டு, இருளில் தேடுகிற கதைதான். எது ‘அகப்படுகிறதோ' அதைக் கொண்டே மேலும் எதுவும் இருக்கலாமோ என்று ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது.

இதில், வரி செலுத்துவோரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். காரணம், ‘திரட்டப்படுகிற', ‘வந்து சேர்கிற' தகவல்கள் எல்லாம், ஒரளவுக்குத்தான் உதவும். நிறைவாக மதிப்பீடு செய்ய, வரி செலுத்துவோர் கூறுகிற, தருகிற விவரங்கள் மிக முக்கிய தேவையாகும். அவரது ஒத்துழைப்போடுதான் அவரின் தவறுகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்! மதிப்பீட்டின்போது விட்டு விட்டால், அரசுக்கு முறையாக வர வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படும்.

கணக்குத் தணிக்கையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டால், மதிப்பீட்டு அலுவலர், பதில் சொல்ல வேண்டி வரும்; துறை சார் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகலாம். இந்த நிலையில் எந்த நபரும் என்ன செய்ய முனைவார்..? ‘இப்போதைக்கு' வருமானத்தில் சேர்த்து விடுவோம். வேண்டுமானால் வரி செலுத்துவோர், மேல் முறையீடு செய்து, நிவாரணம் பெற்றுக் கொள்ளட்டும்'. ஓர் அரசு அலுவலர் இப்படித்தானே செயல்பட முடியும்..?

இத்தகைய அணுகுமுறை காரணமாக மேல்முறையீட்டு வழக்குகள், அதன் விளைவாய் நிலுவையில் இருக்கும் வரித் தொகை, மென்மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட என்ன செய்யலாம்...? ‘தற்காலிக' முறையீடு (அ) ‘இடைநிலை' முறையீடு என்கிற முறையைப் பரிட்சித்து பார்க்கலாம்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மதிப்பீட்டுப் பணியை நிறைவு செய்ய வேண்டிய சட்ட நிர்ப்பந்தம் இருக்கிறது. எனவே மதிப்பீட்டு ஆணை பிறப்பிக்கப்படட்டும். ஆனால், இந்த மதிப்பீட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட வருமானம் ஏற்புடையது
தானா என்று வரித்துறையில் ஒரு விற்பன்னர் குழு, அவ்வப்போது முடிவு செய்யலாம். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட வருமானம் ‘prima facie' சரியானதுதானா என்று மட்டும் உறுதி செய்து அறிவித்தால் போதும். அதன் மீதான வரித்தொகையை மட்டும், வசூல் செய்ய வேண்டிய வரித் தொகையாகக் கணக்கில் கொள்ளலாம். தொடக்க நிலையிலேயே, வருமானத்தைக் கூட்டுவதற்கான முகாந்திரம் வலுவாக இல்லை என்று கருதப்பட்டால், அப்போதே மதிப்பீட்டு ஆணையைத் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கலாம்.

இந்த வழிமுறை மூலம், வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டு அலுவலருக்கு, வரிக் கடப்பாடு எவ்வளவு இருக்கிறது என்பதில் தெளிவு இருக்கும். ஏற்கனவே துறை விற்பன்னர்களைக் கொண்டு தொடக்க நிலை ஆய்வு நடைபெற்று உள்ளதால், மேல் முறையீட்டுக்குச் செல்வது பற்றி வரி செலுத்துவோர், தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டி இருக்கும். இந்த நடைமுறையைக் கொண்டு வருவதில் அதிகம் சிக்கல் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் தற்போதுள்ள அலுவலர் பணியிடங்
களைக் கொண்டே இது சாத்தியமா..? தற்போதும் கூட, கூடுதல் வரி விதிப்புக்கு முன்பாக உயர் அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்பே, மதிப்பீட்டு ஆணை பிறப்பிக்கப் படுகிற வழக்கம், அதிகார பூர்வமற்ற முறையில் இருக்கவும் செய்யலாம். இதனை முறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

இந்த வழிமுறையால், வரித் தொகைகள், வழக்குகளில் சிக்குண்டு போவதைப் பெருமளவில் தவிர்க்க முடியும். ‘முகமற்ற மதிப்பீடு' ('faceless assessment') இந்த திசையில் ஒரு வழிமுறையைக் கொண்டு வர இருக்கிறது. வரித் தொகை நிலுவைக்கு, மதிப்பீட்டு அலுவலரின் சந்தேகத்துக்கு இடமான சேர்ப்பு மட்டுமேதான் காரணமா..? வரி செலுத்துவோரின் கடமை எதுவுமே இல்லையா...? வரி செலுத்துவதற்கான காலக் கெடுவுக்குள்ளாக அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறை இருந்தாலே போதும். நிலுவைக்கு இடம் இருக்காது. அரசாங்கத்துக்குப் பணம் தருவதென்றால் பல பேருக்கு மனம் வருவதே இல்லை. ‘இயன்றவரை தள்ளிப் போடுவோம்; முடிந்தவரை குறைக்கப் பார்ப்போம்' என்கிற போக்கு, பரவலாகி வருகிறது.
நல்ல வேளையாக சம்பளதாரர்கள், உடனடியாக வரி செலுத்துவதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். அதற்காகவேனும் அவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்தலாம். அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். நிறைவாக, வருமான வரித் துறையில் மட்டும்தானா ‘நிலுவைகள்' உள்ளன..? நீதி மன்றங்களில்...? வங்கிக் கடன்களில்..? அவ்வளவு ஏன்.... உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தேர்ச்சி பெறாது நிலுவையில் வைத்துள்ள பாடங்கள்...?

முடிக்கப் படாத திட்டங்கள்..? நிறைவேற்றப் படாத வாக்குறுதிகள்...? நிலுவைகளில் ‘வளர்கிறது' நம் தேசம்!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x