Published : 05 Jan 2020 01:33 PM
Last Updated : 05 Jan 2020 01:33 PM
ஹைதராபாத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி சிஏஏவுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடைபெறும்; ஜனவரி 25 நள்ளிரவு ஹைதராபாத்தில் உள்ள வரலாற்றுச்சின்னமான சார்மினாரில் தேசியக் கொடியை தான் ஏற்றப்போவதாகவும் ஹைதராபாத் எம்.பியும் அகில இந்திய மஜிலிஸ் - இ - இத்தாஹதுல் முஸ்லிமன் (ஏஐஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளளதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் சிஏஏவை ஆதரித்தும் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
நேற்று, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 40 வெவ்வேறு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) ஏற்பாடு செய்த இந்த 'மில்லியன் மார்ச்' பேரணியில் ஏராளமானோர் கடந்துகொண்டனர். பேரணி நடைபெற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, சிஏஏவை எதிர்த்து சங்கரேடி நகரில் ஐக்கிய முஸ்லீம் நடவடிக்கைக் குழு (யுஎம்ஏசி) பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு ஜனவரி 10ல் நடைபெற உள்ள பேரணி குறித்து ஹைதராபாத் எம்.பி. ஒவைசி கூறியுள்ளதாவது:
''ஜனவரி 10 அன்று நடைபெறும் பேரணி மிர் ஆலம் எட்காவிலிருந்து தொடங்கி சாஸ்திரபுரம் மைதானத்தில் நிறைவடையும். நகரத்தில் பேரணிக்கு தெலுங்கானா அரசு அனுமதி மறுத்ததால், அதை ராஜேந்தர்நகரில் (புறநகரில்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 25 ஆம் தேதி சார்மினாரில் ஒரு பெரிய பொதுக் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் உதிக்கும் அதிகாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினாரில் தேசியக் கொடி பறக்கவிடுவேன். குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் அப்போது தேசிய கீதம் பாடப்படும். அரசியலமைப்பையும் நாட்டையும் காப்பாற்றும் நோக்கில் நாட்டின் முன்னணி கவிஞர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள்.
மக்கள் அனைவரும் அரசியலமைப்பின் முன்னுரையைப் படித்து, செல்ஃபி வீடியோக்களை அவர்கள் உருவாக்க வேண்டும், அத்துடன் 'கறுப்புச் சட்டத்தை' ரத்து செய்யுமாறும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த வீடியோக்களை டிக்டோக், பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் Merasamvidhan என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுங்கள்.
சிஏஏ, தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை அமைதியான முறையில் நாம் தொடர வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
ஆர்ப்பாட்டங்கள் இன்னும் 4—5 மாதங்களுக்கு தொடர வேண்டும், இதனால் மக்கள் எழுச்சியடைவதை ஆட்சியாளர்கள் அறிய வேண்டும். போராட்டத்தில் ஒரு புதிய வாழ்க்கையை கொண்டுவந்ததற்காக ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
பாகிஸ்தானுடன் தொடர்பு இல்லை
சிறுபான்மையினரை அடக்குவதற்கு பாகிஸ்தானைக் கண்டிக்குமாறு சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மோடி அறிவுறுத்துகிறார். ஆனால் நான் சொல்வது என்னவெனில் இந்திய மக்களுக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான்.
பிரதமர் மோடிஜி, நாங்கள் பாகிஸ்தானைப் பற்றி கவலைப்படுவதேயில்லை. எங்கள் கனவுகளில் கூட நாங்கள் பாகிஸ்தானைப் பற்றி யோசிக்க மாட்டோம், ஆனால் நீங்கள் அடிக்கடி பாகிஸ்தானின் பெயரை எடுத்துக்கொள்கிறீர்கள்.
பிரிவினையின்போது முஸ்லிம் மக்கள் முகமது அலி ஜின்னாவை நிராகரித்தனர். இந்தியாவில் வாழ்வதையே அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை மோடி அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பாக். பிரதமர் இம்ரானுக்கு கண்டிப்பு
பாகிஸ்தான் பிரமர் இம்ரான் கான் வங்கதேச சம்பவ வீடியோவைவெளியிட்டு இந்தியா மீது பழிசுமத்திய தங்கள் செயல் முற்றிலும் கண்டிக்கத்தது.
முதலில் அங்குள்ள சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். அவர்களின் வழிபாட்டுத் தலத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள்.
நான் இம்ரான் கானை கேட்டுக்கொள்வதெல்லாம், நீங்கள் தயவுசெய்து இந்திய முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்கு அல்லா போதும்.
நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள். நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம், எங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டாம். ஜின்னாவின் செய்தியையும் தவறான கோட்பாட்டையும் நாங்கள் நிராகரித்தோம். நாங்கள் பெருமைமிக்க இந்திய முஸ்லிம்கள், இந்த உலகத்தின் இறுதி வரை அப்படியே இருப்போம்.
சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அது இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான வேலையை அவர்கள் செய்கிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதை மதத்தின் அடிப்படையில் செய்யப்படக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.''
இவ்வாறு ஹைதராபாத் எம்.பியும் அகில இந்திய மஜிலிஸ் - இ - இத்தாஹதுல் முஸ்லிமீன் (ஏஐஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT