Published : 04 Jan 2020 09:28 PM
Last Updated : 04 Jan 2020 09:28 PM

பாகிஸ்தான் குருத்வாரா தாக்குதல் விவகாரம்: மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி

பாகிஸ்தானின் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசை நிர்பந்தம் செய்து வழக்கு தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருத்வாரா உள்ளது. இது சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ் பிறந்த இடமாகும். சீக்கியர்களின் புனித ஸ்தலமாக இது மதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீக்கியப் பெண் ஜகித் என்பவரை முகமது ஹசன் என்பவர் அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன், அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து அறிந்த முகமது ஹசன் மற்றும் அவரின் சகோதரர் முகமது இம்ரான் ஆகியோர் நேற்று மாலை குருத்வாரா பகுதிக்கு வந்து சீக்கிய யாத்ரீகர்கள் மீது கல்வீசித் தாக்கினர்.

மேலும், சீக்கிய குருத்வாராவை அடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசனும், முகமது இம்ரானும் அங்கிருந்தவர்களை மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘பாகிஸ்தானின் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்துக்குரியது. தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து வழக்கு தொடர வேண்டும். பாகிஸ்தான் அரசை நிர்பந்தம் செய்து வழக்கு தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x