Published : 04 Jan 2020 05:48 PM
Last Updated : 04 Jan 2020 05:48 PM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தை நாங்கள் தூண்டிவிடுவதாக பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தை நாங்கள் தூண்டிவிடுவதாக பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கிறது. இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் அணி திரண்டு காங்கிரஸுடன் கரம் கோர்த்து போராடுகிறார்கள். இதை எப்படி தூண்டிவிடுவதாக கூற முடியும்.
மக்கள் தொகை பதிவேடு என்பது தனியானது என பாஜக கூறுவது தவறு. மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு, மற்றும் குடியுரிமை சட்டம் என பல வார்த்தைகளில் கூறினாலும் இவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை தான். யாரை வெளியேற்ற வேண்டும் என கண்டறிவது தான் இவர்கள் நோக்கம்.
பிறகு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், 15 வெவ்வேறு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக கடைசியாக வசித்த இடம், பிறந்த இடம், தாய், தந்தையர் வசித்த இடம், ஓட்டுநனரின் உரிம எண், ஆதார் எண் இவையெல்லாம் எதற்காக. எனவே திட்டமிட்டு சிலரை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT