Published : 20 Aug 2015 08:40 AM
Last Updated : 20 Aug 2015 08:40 AM

பத்து நாட்களில் 2-வது முறையாக திருப்பதி கோயில் மேலே விமானம் பறந்ததால் சர்ச்சை

கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக நேற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே விமானம் பறந்தது. இது கோயில் பாதுகாப்புக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என சாஸ்திர வல்லுநர்கள் கூறியிருப்பதால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு கருதி கோயில் கோபுரம் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டுமென விமானப் போக்குவரத்துத் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல முறை கடிதம் எழுதி உள்ளது.

சமீபத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜுவும், ‘விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்திருந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயில் கோபுரத்தின் மேலே விமானம் பறந்து சென்றது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் மீண்டும் விமானம் பறந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாதுகாப்புக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என சாஸ்திர வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கோபுரம் மேலே விமானங்கள் பறக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்ச கத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x