Published : 02 Jan 2020 03:08 PM
Last Updated : 02 Jan 2020 03:08 PM
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண், 12 நாட்களுக்குப் பின் ஜாமீன் பெற்று தனது 14 மாதக் குழந்தையுடன் இணைந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட பெனியா பாக் பகுதியில் ஏராளமானோர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி போராட்டம் நடத்தினார்கள்.
அங்கு அப்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், தடையை மீறிப் போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஏக்தா சேகர் (32), ரவி சேகர் (36) இருவரும் கணவன், மனைவியாவர். இவர்கள் இருவரும் கிளைமேட் அஜெண்டா எனும் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 14 மாதத்தில் சம்பக் எனும் பெண் குழந்தை உண்டு.
வீட்டில் தனது தாய் ஷீலா திவாரியிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, ஏக்தா போராட்டத்துக்குச் சென்றார். ஆனால், போராட்டத்தில் கைது செய்யப்பட்டுக் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக ஏக்தா சிறையில் இருந்தார். 14 மாதங்களே ஆன குழந்தை சம்பக் தனது தாய் ஏக்தாவிடம் தாய்ப்பால் குடித்து வருகிறார். கடந்த 12 நாட்களாகத் தாயைக் காணாமல் குழந்தை சம்பக் அழுது கண்ணீர் வடித்து வந்தது.
ஏக்தாவின் தாயார் ஷிலா திவாரி, பேத்திக்குப் போக்குக் காட்டி கதைகள் சொல்லியும், விளையாட்டு செய்தும், உணவளித்து வந்தாலும் தாயைப் பிரிந்து வாட்டத்துடனே சம்பக் காணப்பட்டார். இதற்கிடையே ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் மறுத்து ஜனவரி 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில், ஏக்தா சேகர், ரவி சேகர் உள்ளிட்ட 56 பேரின் ஆகியோரின் ஜாமீன் மனு நேற்று வாரணாசி கூடுதல் மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 12 நாட்களுக்குப் பின் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாமீன் உத்தரவை மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் இருந்து பெற்று சிறையில் கொடுத்து விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், சிறைக்குச் செல்ல ஏக்தாவின் குடும்பத்தினருக்கு 7 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
சிறைக் கண்காணிப்பாளரிடம் சென்று ஏக்தா குடும்பத்தினர் ஜாமீனை அளித்தபோது, அவர் 7 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறி நேற்று ஜாமீனில் அனுப்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று காலை சிறையில் இருந்து ஏக்தாவும், அவரின் கணவர் ரவி சேகரும் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 12 நாட்களாகத் தாயைக் காணாமல் இருந்த 14 மாதக் குழந்தை சம்பக், தாயைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் தாவிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டது.
தனது குழந்தையைக் கண்ட மகிழ்ச்சி குறித்து ஏக்தா சேகர் கூறுகையில், "நான் இத்தனை நாட்கள் சிறையில் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நீண்ட நாட்கள் எனது மகளைப் பிரிந்துவிட்டேன். இப்போது எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. ஆர்வலராகப் போராட்டம் செய்து சிறை சென்றது பெருமையாக இருந்தாலும், தாயாக வருத்தமாக இருக்கிறது. 14 மாதக் குழந்தையைப் பிரிந்ததும் வேதனையாக இருந்தது. இப்போது என் மகள் என்னிடம் வந்து மகிழ்ச்சியாக இருக்கிறாள்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT