Published : 02 Jan 2020 12:36 PM
Last Updated : 02 Jan 2020 12:36 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தவிதமான சட்டபூர்வ அந்தஸ்தும் இல்லை என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையில் கேரள அரசு சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
கேரள அரசு சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பட்டியலில் இருக்கிறது. இதை நீக்குவதற்கும், புறக்கணிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றம் மட்டுமே இதற்குத் தனி அதிகாரம் படைத்தது. சட்டப்பேரவை அல்ல, அது கேரள சட்டப்பேரவையாக இருந்தாலும் அதிகாரம் கிடையாது" எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேச்சுக்கு இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கையில், "ஒவ்வொரு மாநிலச் சட்டப்பேரவைக்கும் சிறப்பு உரிமை இருக்கிறது. சட்டப்பேரவைக்கு என அரசியலமைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதை ஒருபோதும் மீறக்கூடாது" எனத் தெரிவித்தார்.
கேரள முதல்வரின் இந்தப் பேச்சுக்குப் பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளிக்கையில், "நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அது மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சட்டக் கடமை. ஏனென்றால் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் என்பது அரசியலமைப்பில் மத்திய அரசின் பட்டியலில் உள்ளவற்றின் மீது சட்டம் இயற்றியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசுகள் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேரள அரசு சிஏஏ சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:
''குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து இல்லை. ஏனென்றால், குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசு செயல்படுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை.
கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் எதற்காக இந்த அரசியல் கட்சிகள் ஈடுபடுகிறார்கள். இந்தியப் பிரிவினையின்போது, தென் மாநிலமான கேரளா எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதக் குடியேறிகள் யாரும் வராதபோது கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத விஷயம்.
கண்ணூரில் 80-வது இந்திய வரலாற்று மாநாட்டில் நான் பங்கேற்று சிஏஏ குறித்துப் பேசியபோது, எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்திய வரலாற்று மாநாடு சில பரிந்துரைகளை மாநில அரசுக்கு வைத்திருந்தது. அதில் மத்திய அரசுக்கு இணங்கிச் செல்லாதீர்கள் என்று கூறியிருந்தது. அதுபோன்ற பரிந்துரைகள் ஒட்டுமொத்தமாக சட்டவிரோதம், கிரிமினல் உள்நோக்கம் கொண்டது''.
இவ்வாறு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT