Last Updated : 02 Jan, 2020 11:19 AM

7  

Published : 02 Jan 2020 11:19 AM
Last Updated : 02 Jan 2020 11:19 AM

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்கள் எங்கு செல்வார்கள்? இத்தாலிக்கா?- மத்திய அமைச்சர் கேள்வி

மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி : கோப்புப்படம்

வாரணாசி

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்கள் அடைக்கலமாக இத்தாலிக்கா செல்வார்கள்? இந்தியாவுக்குத்தான் வருவார்கள் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மேற்கு வங்கம், கேரளம் ஆகியவை குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளன.

இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் வாரணாசியில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்கள் தங்களுக்கு ஏதேனும் மதரீதியான தொந்தரவுகள், சிக்கல்கள் ஏற்பட்டால் எங்கு செல்வார்கள்? அவர்கள் இந்தியாவுக்குத்தான் வரமுடியும். அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது இந்தியாவின் தார்மீகக் கடமை. அவர்கள் இந்தியாவுக்குள் வராமல் இத்தாலிக்கா செல்ல முடியும். இத்தாலி நாடு இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் இவர்கள் ஏழைகள்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், ஜைனர்கள் அனைவரும் 30 சதவீதம் இருந்தநிலையில் இன்று கணிசமாகக் குறைந்துவிட்டார்கள். ஆதலால், மதரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்குள் வருவோருக்குக் குடியுரிமை வழங்குகிறோம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், ஜிஎஸ்டி வரிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், சமீபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தால் ஜிஎஸ்டி வரி உயருமா?

ராகுல் காந்தியின் இந்த அறிக்கை முதிர்ச்சியற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், ஜிஎஸ்டி வரிக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், நல்ல ஆசிரியரைப் பணிக்கு அமர்த்தி ராகுல் காந்தி கற்றுக் கொள்ளட்டும். ராகுல் காந்திக்கு என்ஆர்சி குறித்தும், என்பிஆர் குறித்தும் எந்தவிதமான சிந்தனையும், புரிதலும் இல்லை என்று நினைக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் மிகவும் மோசமான மலிவான அரசியலை நடத்துகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து, மக்களைத் தூண்டி விடுகிறார்கள். அமைதியான போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் வன்முறையை த் தூண்டி விடுகிறார்கள்’’.

இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x