Published : 02 Jan 2020 10:49 AM
Last Updated : 02 Jan 2020 10:49 AM
கர்நாடக மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் விவசாயிகள் உதவித் திட்டத்தின் கீழ் 3 கட்டமாக ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை 6 கோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2019, பிப்ரவரி மாதம் 24-ம் தேதி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 2 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இதில் 3-வது தவணையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மூன்றாவது தவணைக்காக ரூ.12 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
உழவர்கள் திருநாள், பிகு, மகரசங்கராந்தி, லோஹ்ரி ஆகிய பண்டிகைகள் வரும் 15-ம் தேதி வருவதால், அதற்கு முன்பாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் மூன்றாவது தவணை உதவித்தொகை கிடைக்கும் நோக்கில் இந்த திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இரு நாட்கள் பயணமாக கர்நாடக மாநிலம் வரும் பிரதமர் மோடிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகைக்கு முன்பே அவரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து கர்நாடக போலீஸாருடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தினர்.
முதல் கட்டமாக இன்று பிரதமர் மோடி பெங்களூரு வந்த பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தும்கூரு செல்ல உள்ளதாகத் தெரிகிறது. தும்கூருவில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் முன் ஸ்ரீ சித்த கங்கா மடத்துக்குப் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
தும்கூருவில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கிருஷி கர்மான் விருதுகளை வழங்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 3-கட்ட தவணை உதவித் தொகையையும், கர்நாடக கடற்கரை ஓர மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உபகரணங்களையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
அதன்பின் மாலையில் மீண்டும் பெங்களூரு திரும்பும் பிரதமர் மோடி பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று பார்வையிடுகிறார். அதன்பின் இன்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வு எடுக்க உள்ளார்.
பெங்களூருவில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக்தில் நாளை நடக்கும் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேச உள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்.
தும்கூருவில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 21 மாவட்டங்களில் இருந்து 28 விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கிருஷி கர்மான் மற்றும் கிருஷி சம்மான் விருதுகளை வழங்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT